‘பனி விழும் இரவு’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘பனி விழும் இரவு’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘பனி விழும் இரவு’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி


திருமண வாழ்க்கையைத் தொடங்கத் தயாராகும் அருண் கார்த்திக் - எனாக்‌ஷி கங்குலி ஜோடி, தங்களது திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் படப்பிடிப்புக்காக கொடைக்கானலுக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் தங்குவதற்குத் தேர்வு செய்யும் விருந்தினர் இல்லம், சாதாரணமான தங்கும் இடமாக இல்லாமல், பல மர்மங்களையும் அமானுஷ்ய அனுபவங்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் இடமாக இருக்கிறது.

அந்த இல்லத்தில் ஏற்கனவே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கும் பின்னணியில், அங்கு தங்கும் அருண் கார்த்திக்கிற்கு விசித்திரமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அவருடைய கண்களுக்கு மட்டும் அடிக்கடி தென்படும் ஒரு பொம்மை, வீட்டிற்குள் தங்களைத் தவிர வேறு யாரோ நடமாடுவது போன்ற உணர்வு என ஒவ்வொரு நிகழ்வும் அவருக்குள் அச்சத்தை அதிகரிக்கிறது.

இந்தச் சூழலில், திடீரென்று எனாக்‌ஷி கங்குலி காணாமல் போகிறார். அவரைத் தேடி அலைந்தாலும், காதலியின் குரல் மட்டுமே அருண் கார்த்திக்கிற்குக் கேட்கிறது. அந்தக் குரல் ஒலிக்கும் திசையை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. என்ன நடக்கிறது என்று புரியாமல் தவிக்கும் அவர், இறுதியில் காவல்துறையின் உதவியை நாடுகிறார். இதையடுத்து விசாரணையில் இறங்கும் காவல்துறையினர், இதுவரை வெளிச்சத்திற்கு வராத பல அதிர்ச்சிகரமான தகவல்களை கண்டறிகிறார்கள். அந்த மர்மங்களின் உண்மையான பின்னணி என்ன ?, காணாமல் போன காதலி மீட்கப்பட்டாரா ?, அருண் கார்த்திக்கின் அனுபவங்களுக்கான காரணம் என்ன ? என்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது படத்தின் மீதிக்கதை.

சின்னத்திரை அனுபவத்திலிருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் அருண் கார்த்திக், அறிமுக நாயகன் என்ற தயக்கமின்றி கதையின் மையப்பாத்திரத்தை தன்னுடைய தோள்களில் சுமந்திருக்கிறார். காதலியைத் தொலைத்துவிட்டு பதற்றத்துடன் தேடும் காட்சிகளிலும், தன்னைச் சுற்றி நிகழும் புரியாத சம்பவங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகும் தருணங்களிலும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக, குழப்பம், அச்சம், பதற்றம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் இடங்களில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது.

எனாக்‌ஷி கங்குலிக்கு வழக்கமான கதாநாயகிக்கான முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், கதையின் தேவைக்கேற்ப தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கருப்பு நம்பியார், சேரன்ராஜ், சரவணசக்தி, செ.ரா.ராஜேஷ், கஜராஜ், சுருளி, உமர், வினோத் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை இயல்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். இவர்களது பங்களிப்பு கதையின் நம்பகத்தன்மைக்கு உறுதுணையாக அமைந்திருக்கிறது.

படத்தின் முக்கியமான பலம் ஒளிப்பதிவு. ஒரே வீட்டைச் சுற்றி பெரும்பாலான காட்சிகள் நகர்ந்தாலும், ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல் பயன்படுத்தியிருக்கும் கேமரா கோணங்கள் காட்சிகளுக்கு புதுமையான தோற்றத்தை அளிக்கின்றன. குறிப்பாக, இருளையும் வெளிச்சத்தையும் இணைத்து அவர் உருவாக்கியிருக்கும் காட்சியமைப்பு பார்வையாளர்களுக்குள் ஒருவித அச்ச உணர்வை தொடர்ந்து ஏற்படுத்துகிறது.

அதே நேரத்தில், கொடைக்கானலின் இயற்கை எழிலையும் தனது கேமரா வழியாக அழகாகப் பதிவு செய்திருக்கிறார். திகில் நிறைந்த சூழலுக்கும் இயற்கையின் அழகுக்கும் இடையிலான வேறுபாடு படத்திற்கு கூடுதல் ரசனையைத் தருகிறது.

சதாமுருகனின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கின்றன. சந்தோஷ் முருகன் மற்றும் சதாமுருகன் ஆகியோரின் வரிகளும் பாடல்களுக்கு பொருத்தமாக அமைந்துள்ளன. பின்னணி இசையில் தேவையற்ற இரைச்சலைத் தவிர்த்து, காட்சிகளின் தன்மைக்கேற்ப இசையைப் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, அமைதியான சூழலிலேயே அச்சத்தை உருவாக்கும் பின்னணி இசை திகில் அனுபவத்திற்கு வலு சேர்க்கிறது.

எம்.எஸ்.செல்வா மற்றும் சி.ஆர்.புவனேஷ் ஆகியோரின் படத்தொகுப்பு கதையின் வேகத்திற்கு உதவியிருக்கிறது. மர்மம் நிறைந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தும் விதமும், அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் காட்சிகளின் கோர்வையும் படத்தின் சுவாரஸ்யத்தைத் தக்கவைக்கின்றன.

இயக்குநர் செ.ரா.ராஜேஷ், வழக்கமான திகில் படங்களின் பாதையில் பயணிக்காமல், கிரைம் திரில்லர் அம்சங்களையும் அமானுஷ்ய மர்மங்களையும் இணைத்து வித்தியாசமான கதையை உருவாக்க முயற்சித்திருக்கிறார்.

ஒரே இரவில், குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் மற்றும் ஒருசில இடங்களை மையமாக வைத்து கதையை நகர்த்துவது சவாலான விஷயம். ஆனால், அந்த வரம்புகளுக்குள்ளேயே பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் உருவாக்கி, பார்வையாளர்களின் கவனத்தைத் தக்கவைத்திருக்கிறார் இயக்குநர் செ. ரா. ராஜேஷ்.

படத்தின் தொடக்கத்திலேயே கதையின் முக்கியச் சம்பவத்திற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் திரைக்கதை, தேவையற்ற விவரிப்புகளைத் தவிர்த்து வேகமாகப் பயணிக்கிறது. சிறிய காட்சிகள், பின்னணியில் இடம்பெறும் மர்மமான நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் நடவடிக்கைகள் என ஒவ்வொன்றின் மூலமாகவும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்.

கதையின் உண்மையான பின்னணி என்னவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாத வகையில் திரைக்கதையை அமைத்திருப்பது படத்தின் முக்கியமான சிறப்பு. சில இடங்களில் சிறு குறைகள் தென்பட்டாலும், அவை ஒட்டுமொத்த அனுபவத்தைப் பெரிதாகப் பாதிக்காத வகையில் காட்சிகளைத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

வித்தியாசமான கதைக்கரு, அருண் கார்த்திக்கின் பொறுப்பான நடிப்பு, மிரட்டலான ஒளிப்பதிவு, கதையோடு பயணிக்கும் இசை மற்றும் இறுதிவரை நீடிக்கும் மர்மம் ஆகியவை படத்திற்கு பலம் சேர்க்கின்றன. சில குறைகள் இருந்தாலும், கடைசி வரை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கும் இந்தப் படம், திகில் மற்றும் கிரைம் திரில்லர் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக அமையும்.

காதல், மர்மம், திகில் என மூன்று அம்சங்களையும் ஒரே புள்ளியில் இணைத்து, ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களின் மூலம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்து,  மர்மம் விலகும் வரை மனதில் திகில் அனுபவதை நீடிக்க வைத்திருக்கும்  ‘பனி விழும் இரவு’ படக்குழுவுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.