ad11

கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்தார் சத்யராஜ்

April 21,2017  

Actor Sathyaraj apologies kannada people

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காவேரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், நடிகர் சத்யராஜ் கன்னடர்களையும், கன்னட அமைப்புகளின் தலைவர்களையும் வன்மையாக கண்டித்தார்.

இந்நிலையில், இயக்குனர் ராஜமௌலியின் பிரமாண்ட படமான "பாகுபலி-2" வரும் 28-ந்தேதி நாடு முழுவதும் திரையிடப்பட உள்ளது. இதற்கிடையில் வாட்டள் நாகராஜ் என்பவர் 9 ஆண்டுகளுக்கு முன் சத்யராஜ் பேசிய பேச்சு கன்னட மக்களை புண்படுத்தும் வகையில் உள்ளது, ஆகையால் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள "பாகுபலி 2" திரைப்படத்தை கர்நாடகாவில் எங்கும் திரையிடவிடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது, இந்த பிரச்சினைக்கு நடிகர் சத்யராஜ் வீடியோ வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசிய வீடியோவில் கூறியிருப்பதாவது:

ஒன்பது வருடங்களுக்கு முன்னாள் காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ் படங்கள் திரையிடுவதை நிறுத்தச்சொல்லி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகின் சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பலரும் ஆவேசமாக பேசினார்கள். அவர்களில் நானும் ஒருவன். அப்படி நான் பேசியபோதே என்னுடைய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன்.

நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே, 35 வருடங்களாக என்னிடம் உதவியாளராக இருக்கும் சேகர் என்பவரின் தாய்மொழி கன்னடம். கடந்த 9 வருடங்களில் ‘பாகுபலி’ பாகம் 1 உள்பட நான் நடித்த சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளன. எந்த பிரச்சினையும் எழவில்லை.

9 வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த கண்டன கூட்டத்தில் நான் பேசிய அந்த வீடியோ பதிவை யூடியூப்பில் பார்த்ததாலும், நான் பேசிய சில வார்த்தைகளால் கன்னட மக்களின் மனம் புண்படுவதாக அவர்கள் கருதுவதாலும் அந்த சில வார்த்தைகளுக்காக 9 வருடங்களுக்கு பிறகு நான் கன்னட மக்களிடம் என் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழக மக்களுக்கும், என் நலம் விரும்புபவர்களுக்கும் என் மீது வருத்தம் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் ஒரு மிகச்சிறிய தொழிலாளி தான் நான். என் ஒருவனுடைய செயலின் பொருட்டு, சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பும், பணமும் விரயம் ஆவதை நான் விரும்பவில்லை.

ஆனாலும், இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் பிரச்சினையாக இருந்தாலும் சரி, காவிரி நதிநீர் பிரச்சினையானாலும் சரி, விவசாயிகள் பிரச்சினையானாலும் சரி, தமிழக மக்களின் நலம் சார்ந்த அனைத்து நியாயமான பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத்தெளிவாக கூறிக் கொள்கிறேன்.

இப்படி நான் கூறுவதால் இந்த சத்யராஜை வைத்து படம் எடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவுசெய்து இந்த சாதாரண, சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யவேண்டாம், என்னால் நஷ்டமடைய வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால், ஒரு நடிகனாக இருப்பதைவிட, இறப்பதைவிட எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி. எனது மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு பாகுபலி-2 ஆம் பாகத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.