ad11

மதுர வீரன் - சினிமா விமர்சனம்!!!

February 03,2018  

Madura Veeran Movie Review

கேப்டன் விஜயகாந்தின் வாரிசு சண்முகபாண்டியன் கதாநாயகராக நடிக்க, கதாநாயகியாக மீனாட்சி அறிமுகமாக, பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, எழுத்து மற்றும் இயக்கத்தில், சமுத்திரகனி, பாலசரவணன், "நான் கடவுள்' 'ராஜேந்திரன், வேல ராமமூர்த்தி, 'மைம்' கோபி, இயக்குனர் மாரிமுத்து, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்... உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "மதுர வீரன்".

மதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றுக்கு தலைவர் சமுத்திரக்கனி. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் உள்ள மக்களில் ஒரு வகையினர் அங்குள்ள கோவிலுக்குள் செல்லவும், ஜல்லிக்கட்டு போட்டி உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாதபடி தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சமுத்திரக்கனி, அனைத்து மக்களும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும், யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கலாம் என்றும் ஊர் மத்தியில் அறிவிக்கிறார்.

அவரது முடிவுக்கு அதே ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட சில குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருந்தும் சமுத்திரக்கனியின் அறிவிப்பால் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஏற்படும் பிரச்சனையில், சமுத்திரக்கனி உயிரிழந்துவிடுகிறார். அதேநேரத்தில் அந்த ஊரின் முக்கிய நபரான வேல ராமமூர்த்தியின் தம்பியும், பக்கத்து ஊரில் இருக்கும் மைம் கோபியின் அண்ணனும் உயிரிழந்து விடுகின்றனர்.

இதையடுத்து கணவனை இழந்து தவிக்கும் சமுத்திரக்கனியின் மனைவி, அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் அவரது சிறுவயது மகனான சண்முகபாண்டியனை அழைத்துக் கொண்டு மலேசியாவுக்கு சென்றுவிடுகிறார். பின்னர் சண்முகப்பாண்டியனுக்கு பெண் பார்ப்பதற்காக 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர்.

அங்கு ஜாதி பிரச்சனையால் நின்று போன ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்த வேண்டும், தனது அப்பா சமுத்திரக்கனியை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் சண்முகபாண்டியன்.

கடைசியில் சமுத்திரக்கனியை கொன்றவர்களை சண்முகபாண்டியன் பழிவாங்கினாரா? அந்த ஊரில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.கேப்டன் விஜயகாந்தின் வாரிசு சண்முகபாண்டியன் அப்பாவைக்காட்டிலும் நல்ல உயரம் அதற்கேற்ற உருவம்... . எந்தவித அலட்டலுமின்றி, ஹீரோயிசம் இல்லாமல் சண்முகபாண்டியன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.", கதாநாயகியாக அறிமுகம் மீனாட்சி, தனம் எனும் மதுரை மண் மண பாத்திரத்தில் வாயாடியாக செம கலக்கல். ஊர் தலைவராக சமுத்திரக்கனி கலக்கியிருக்கிறார். அவர் பேசும் வசனங்களும், அவரது நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மிடுக்கான தோற்றம், நடை என வேல ராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார். பாலசரவணன், "நான் கடவுள் ''ராஜேந்திரன், மைம் கோபி, மாரிமுத்து, பி.எல்.தேனப்பன் என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

கே.எல்.பிரவினின் படத்தொகுப்பில் பெரிய பழுதில்லை. சந்தோஷ் தயாநிதியின் இசையில், "அய்யா நீ பார்த்தாலே...." "கொம்புல கொம்புல....", "காட்டேரி நெருங்காம.....", "என்ன நடக்குது நாட்டுல...." உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் கிராமியம், ரம்மியம்!

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, எழுத்து மற்றும் இயக்கத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நமது ஊர் கிராமங்களில் நடக்கும் சாதி பிரச்சனை தான் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் செய்யும் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறார்.

மொத்தத்தில் `மதுரவீரன்' சூராதி...சூரன்.!!