ad11

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்- சினிமா விமர்சனம்..!!

February 03,2018  

Oru Nalla Naal Paathu Solren Movie Review

குழந்தைகள், பெண்களுக்கு எதுவும் ஆகாமல், யாரையும் அடிக்காமல், அரசியல் பண்ணாமல் நேர் வழியில் திருடும் தொழில் செய்பவர் விஜய் சேதுபதி. திருடுவதற்காக அவரது அம்மாவால் குறிபார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ‘எமசிங்கபுர’த்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படுகிறார். ரமேஷ் திலக், ராஜ்குமார் இருவரும் உடன் வருகிறார்கள். திருடவந்த இடத்தில் கல்லூரி மாணவி நிஹாரிக்கா கோனிடெல்லாவை சந்திக்கிறார். பிறகு திருட்டை மறந்து நிஹாரிகா பின்னாலேயே சுற்றுபவர், அவரை எமசிங்கபுரத்துக்கு கடத்திச்செல்ல முயல்கிறார். இதற்கிடையே நிகாரிகாவுக்கும், அவள் படிக்கும் கல்லூரியில் சீனியராக வரும் கவுதம் கார்த்திக்குக்கும் இடையே காதல் மலர்கிறது.

விஜய் சேதுபதி நிகாரிகாவை கடத்தி தன்னுடைய கிராமத்திற்கு கடத்தி செல்கிறார். தனது காதலியை மீட்கும் முயற்சியில் இறங்கும் கவுதம் கார்த்திக், டேனியலையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு அந்த கிராமத்திற்கு செல்ல முயல்கிறார்.

கடைசியில் கவுதம் கார்த்திக் நிகாரிகாவை மீட்டாரா? விஜய் சேதுபதி ஏன் நிகாரிகாவை கடத்தினார்? அவருக்கும், நிகாரிகாவுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை. சாக்லேட் பாய் இமேஜில் கண்ணாடி போட்டுக்கொண்டு காமெடியில் லைக் தட்டுகிறார் கவுதம் கார்த்திக்.

விஜய் சேதுபதி சிலபல கெட்டப்களில் வந்து துவம்சம் செய்திருக்கிறார். சில இடங்களில் இவர் வசனமே பேசாமல் முக பாவனைகளிலேயே சிரிக்க வைக்கிறார். படம் முழுக்க அவரோடு பயணிக்கும் ரமேஷ் திலக்கும், ராஜ்குமாரும் பக்கா.

படம் முழுக்கவே கவுதமோடு பயணிக்கும் கதாபாத்திரம் டேனியல் ஆனி போப். இவர் அடிக்கும் பன்ச், ரியாக்‌ஷன்ஸ், பாடி லாங்குவேஜ் என அனைத்திற்குமே ஆடியன்ஸிடமிருந்து செம ரெஸ்பான்ஸ்.

ஹீரோயினாக வரும் நிஹாரிகா மற்றும் காயத்ரியும் தன் பங்கிற்கு கவனம் ஈர்க்கிறார்கள். ஆர்ட் டைரக்டர் ஏ.கே.முத்துவின் கலைநயம், எமலிங்கபுரத்தை வெரைட்டியாகக் காட்டியிருக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில்…பார்த்து ரசித்து சிரித்து மகிழலாம்.