ad11

விசிறி- சினிமா விமர்சனம்

February 05,2018  

Visiri Tamil Movie Review

விஜய், அஜித் என இருவரும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களது ரசிகர்கள் அடிதடி, சண்டை என பிரச்சனை கிளப்பி வருகின்றனர். இருவரது ரசிகர்களும் இணைந்தால் எவ்வுளவு நல்லது செய்ய முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருயிருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்.

தீவிரமான தல ரசிகர் ராஜ் சூர்யா. அதேபோல் தளபதி ரசிகர் ராம் சரவணன். இருவருக்கும் இடையே சமூக வலைதளத்தில் அடிக்கடி சண்டை நடக்கிறது. இந்நிலையில் எப்போதும் எங்களுடனே சண்டைக்கு வருகிறாயே, உனக்கு வேறு வேலை இல்லையா, அல்லது காதலி தான் இல்லையா என்று ராம் சரவணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, ராஜ் சூர்யாவை கிண்டல் செய்கிறார்.

இதையடுத்து, தானும் ஒரு பெண்ணை காதலிப்பேன் என்ற சவால் விடுகிறார் ராஜ் சூர்யா. பின்னர் நாயகி ரமோனா ஸ்டெபானியை பார்த்து அவள் மீது காதல் கொள்கிறார். ரமோனா, ராஜ் சூர்யாவின் காதலை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில், ரமோனாவுக்கு ஒரு பிரச்னை வர, தினமும் தன் பின்னால் சுற்றும், ராஜ் சூர்யாவிடம் அந்த பிரச்சனையை சொல்கிறாள். ரமோனாவை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறார் ராஜ் சூர்யா. இதையடுத்து இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். காதலிக்கும் போது தான் ஒரு விஜய் ரசிகன் என்று பொய் சொல்கிறார் ராஜ் சூர்யா. தானும், தனது அண்ணனும் விஜய் ரசிகர்கள் என்றும், அவனிடம் தான் ஒரு விஜய் ரசிகரை தான் காதலிப்பேன் என்றும் பந்தையம் கட்டியிருக்கிறேன் என்று ரமோனா கூறுகிறார்.

இந்நிலையில், போஸ்டர் ஒட்டுவதில் ராஜ் சூர்யாவுக்கும், ராம் சரவணனுக்கும் இடையே சண்டை வருகிறது. இதையடுத்து ராம் சரவணனின் தங்கை தான் ரமோனா என்பதும் ராஜ் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. இருந்தாலும் எனக்கு தல தான் முக்கியம் என காதலை விட்டுக் கொடுக்கிறார் ராஜ் சூர்யா. அதேநேரத்தில் விஜய் ரசிகர் என்று பொய் சொல்லி தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி ரமோனாவும் ராஜ் சூர்யாவை வெறுக்கிறாள். கடைசியில் ராஜ் சூர்யா - ரமோனா ஒன்று சேர்ந்தார்களா? தல - தளபதி என அடித்துக் கொண்டிருந்த ராஜ் சூர்யா - ராம் சரவணன் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

ராஜ் சூர்யா, ராம் சரவணன் என இருவரும் தல - தளபதி ரசிகர்களாக போட்டி போட்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சொல்லப்போனால் தல, தளபதி ரசிகர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். இருவருக்கும் இடையேயான மோதலிலும் சரி, சண்டைக் காட்சியிலும் சரி சம அளவிலான விசிறிகளாகவே வந்து ரசிக்க வைத்திருக்கின்றனர். விஜய் ரசிகையாக ரமோனா கலக்கியிருக்கிறார். நாயகர்களின் பெற்றோர்களாக வருபவர்களும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கின்றனர். இயக்குநர் வெற்றி மகாலிங்கம் ஆக்‌ஷன், காமெடி, காதல் என அனைத்தும் ஒருசேர கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். ரசிகர்களுக்கான, இளைஞர்களுக்கான படமாக இதை உருவாக்கி இருக்கிறார்.

தன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத் இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. விஜய் கிரணின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `விசிறி' ரசிகர்களின் படம்.