சென்னை தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 60 சிலைகள் பறிமுதல்

சென்னை தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 60 சிலைகள் பறிமுதல்

சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா என்பவர் வீட்டில் இருந்து 89 புராதான சிலைகள், கோவில் தூண்கள் மற்றும் தொன்மையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமானது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மின்சாரக் கனவு படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ரன்வீர் ஷா. இப்படத்தில் உள்ளாடை தயாரிப்பு நிறுவன தொழில் அதிபராக, நடிகை கஜோலை பெண் பார்க்க வரும் கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

ரன்வீர் ஷா படத்தில் மட்டும் அல்லாது உண்மையாகவே ஆடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தக்காரர். சென்னை கிண்டியில் Ps அப்பேரல்ஸ் என்ற ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆந்திர தொழிலதிபரான தீனதயாளன் என்பவருக்கு சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து ஏராளமான சிலைகள், பழங்கால ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சமயத்தில் தீனதயாளனின் கூட்டாளி என்று கருதப்பட்ட சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

அங்கு ஏராளமான புராதான சிலைகள், ஓவியங்கள் இருந்தது. ஆனால் அப்போது அந்த சிலைகள் கடத்தப்பட்டவை என்று கருதுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஆதாரங்களை திரட்டிய ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், நீதிமன்ற ஆணை பெற்று, ரன்வீர் ஷா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் தொன்மையான சிலைகள், கோவில் தூண்கள் மற்றும் பழங்கால பொருட்கள் என 89 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ன. இவை அனைத்தும் தமிழக கோவில்களில் இருந்து களவாடப்பட்டவை என்று உறுதிபடத் தெரிவிப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., அசோக் நடராஜன் தெரிவித்தார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு 100 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்றும் அவர் கூறினார்