போலி ஆவணங்களை வைத்து நிதி நிறுவனத்தை ஏமாற்றுபவராக நடிகர் ஜெய்

போலி ஆவணங்களை வைத்து நிதி நிறுவனத்தை ஏமாற்றுபவராக நடிகர் ஜெய்
Actor Jai acts as a fake person in his next

நட்புக்கும் மற்றும் வணிகத்துக்கும் எப்போதுமே ஒரு சிறப்பு பிணைப்பு உண்டு. உண்மையில், "வியாபாரத்தில் நிறுவப்பட்ட ஒரு நட்பு, நட்பில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு வியாபாரத்தை விட சிறந்தது." என்கிறது புகழ்பெற்ற ஒரு மேற்கோள். அதை உடைக்கும் விதமாக நடிகர்கள் ஜெய் மற்றும் நிதின் சத்யா ஆகியோர் நட்பில் உருவாகும் வணிகம் வெற்றிகரமாக இருக்கும் என்று நிரூபித்துள்ளனர். இவர்களுக்கு இடையிலான நட்பு மற்றும் பிணைப்பு பல வருடங்களாகவே இருந்தாலும், அவர்கள் வேலையில் காட்டும் நேர்மையும், ஒழுக்கமும் 'ஜருகண்டி' திரைப்படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கின்றன.

"எங்கள் நட்பிற்காக இதை நான் சொல்லவில்லை, உண்மையிலேயே ஜெய்யின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு மொத்த படப்பிடிப்பிலும் இருந்தது. சொன்ன நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னரே படப்பிடிப்புக்கு வரும் ஜெய், அவரது காட்சிகள் எடுத்து முடித்த பின்னரும் அங்கேயே இருப்பார். மேலும் அவரது சகோதரர் போபோ சசி தான் இந்த படத்தின் இசையமைப்பாளர். பாடல் காம்போஸிங்கின் போதும் கூடவே இருந்தார் ஜெய். ஜெய், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழு ஒத்துழைப்பால் தான் 'ஜருகண்டி' படத்தை 46 நாட்களில் எடுத்து முடிக்க முடிந்தது" என சந்தோஷமாக கூறுகிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.

தயாரிப்பாளராக ஆனதற்கான காரணத்தை பற்றி நிதின் சத்யா கூறும்போது, "நான் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே திரைப்பட தயாரிப்பிலும் ஒரு மயக்கமான ஆர்வம் இருந்தது. அதை பற்றிய நுணுக்கங்களை தெரிந்து கொள்ள நான் நடிக்கும் படங்களில் தயாரிப்பு பக்கத்திலும் அவ்வப்போது எட்டி பார்ப்பேன். எனக்குள் இந்த விருப்பம் படிப்படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் தயாரிப்பில் இறங்க முயற்சி செய்து பார்க்க இது தான் சரியான நேரம் என உணர்ந்தேன். இந்த முயற்சியில் என்னோடு இணைந்த பத்ரி கஸ்தூரிக்கு நன்றி. பத்ரி இந்த செயல்முறையில் எனக்கு வழங்கிய ஆதரவு அசாதாரணமானது" என்றார்.

இந்த படத்தின் மூலம் வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி இயக்குனராக அறிமுகம் ஆகிறார். ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமான இந்த படத்தில் ஜாலியாக வாழ, போலி ஆவணங்களை வைத்து நிதி நிறுவனத்தில் கடன் வாங்குபவராக நடித்திருக்கிறார் ஜெய். மலையாளத்தில் ஜெகோபிண்டே சொர்க்க ராஜ்ஜியம் படத்தில் நடித்த ரெபா மோனிகா நாயகியாக நடித்திருக்கிறார்.

Actor Jai acts as a fake person in his next