பரபரப்பான உண்மைச்சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் விக்ரம் பிரபுவின் புதிய படம்
உண்மைச்சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு!
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி தயாரிப்பில், வெற்றிமாறன் உதவியாளர் இப்படத்தை இயக்குகிறார்!!
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி (LLP) தயாரிப்பில் வெளியான ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்‘ திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்று, வர்த்தகரீதியாகவும் வெற்றி அடைந்தது. இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பான ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். படத்தை இந்த ஆண்டு கோடையில் வெளியிட முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனம் தயாரிக்கும் நான்காவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார். இப்படம் தமிழ்நாட்டில் நடந்த பரபரப்பான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கிறது.
இப்படத்தை தமிழரசன் இயக்குகிறார். இவர் இயக்குனர் வெற்றிமாறனிடம் அசோசியேட்டாக பணிபுரிந்தவர். அமேசான் பிரைமின் முதல் தமிழ் வெப் சீரிஸ் ‘வெள்ள ராஜா’விற்கு ஒளிப்பதிவு செய்த மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
மற்ற நடிக, நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது.