திரைப்பட விநியோகஸ்தர்கள் பாராட்டிய "டிராஃபிக் ராமசாமி"

திரைப்பட விநியோகஸ்தர்கள் பாராட்டிய "டிராஃபிக் ராமசாமி"
Film Distributors Praise Traffic Ramasamy Movie

சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிகாட்டி புரட்சி இயக்குனர் என்று பெயரெடுத்தவர் எஸ்.ஏ.சி . இவர் டிராஃபிக் ராமசாமியாக நடிக்கிறார் என்பதிலிருந்து 'டிராஃபிக் ராமசாமி' திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

சமீபத்தில் டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை பிரத்யேகமாக பார்த்த திரைப்பட வினியோகஸ்தர்கள் படத்தின் இறுதியில் எழுந்து நின்று கைதட்டியது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பற்றி இயக்குனர் விக்கி கூறும்போது , “வினியோகஸ்தர்கள் ஒரு படத்தை ப்ரிவியூ அரங்கில் பார்த்துவிட்டு கைதட்டி வரவேற்பது இது முதல் முறை என்று எண்ணுகிறேன். இப்பாராட்டு சுயநலமில்லாத ஒரு உண்மையான போராளியான டிராஃபிக் ராமசாமியின் துணிச்சலான வாழ்விற்கு கிடைத்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.

தயாரிப்பாளர் சங்கம் இப்பட வெளியீட்டு தேதியாக ஜூன் 22 கொடுத்துள்ளதால் கூடுதல் பூரிப்பில் உள்ளோம். "விஜய் அண்ணனுடைய ரசிகன் நான். அவரை அருகிலிருந்து அடிக்கடி பார்க்கலாம் என்பதற்காகவே இயக்குநர் எஸ் ஏ சி அவர்களிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவர் தந்தையை வைத்து நான் இயக்கியுள்ள ”டிராஃபிக் ராமசாமி” படம் தளபதியின் பிறந்த நாளில் வெளியாவதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதை விட ஒரு ரசிகனுக்கு என்ன வேண்டும்”.

படத்தில் ரோகிணி , பிரகாஷ்ராஜ் , சீமான் ,குஷ்பூ, ஆர்.கே.சுரேஷ் , அம்பிகா , உபாசனா , கஸ்தூரி , மனோபாலா, மதன் பாப் , லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி, மோகன்ராம் , சேத்தன் , தரணி, அம்மு ராமச்சந்திரன் , பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி யுடன் மற்றுமொரு பிரபலநடிகரும் சிறப்பு வேடத்தில் வருகிறார்.

படத்திற்கு குகன் எஸ். பழனி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசை ‘இருட்டறையில் முரட்டு குத்து’ புகழ் பாலமுரளி பாலு. எடிட்டிங் பிரபாகர், கலை ஏ.வனராஜ், சண்டைக் காட்சி - அன்பறிவு, கிரீன் சிக்னல் இப்படத்தை தயாரித்துள்ளது.

Film Distributors Praise Traffic Ramasamy Movie