எஸ்.ஆர்.எம் நைட்டிங்கேல் மெட்ரிக்குலேஷன் பொன்விழா கொண்டாட்டம்!

சென்னை, ஆகஸ்ட் 27, 2018: எஸ்.ஆர்.எம் நைட்டிங்கேல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களைத் தமிழகப் பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் தொடங்கிவைத்தார். விழாவில், தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு பெஞ்சமின், எஸ்.ஆர்.எம் நைட்டிங்கேல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி நிறுவன தாளாளரும், எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி வேந்தருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர், எஸ்.ஆர்.எம் நைட்டிங்கேல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர் ஆர்.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் பொன்விழா கொண்டாட்டம் ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சஸ் அன்ட் டெக்னாலஜி வளாகத்தில் நடந்தது. விழாவில் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி எஸ்.ஆர்.எம் குழும கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வில்லுப்பாட்டு, யோகா, சிலம்பம், கதகளி, இசை, நடனம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாண்புமிகு தமிழகப் பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, "இந்தப் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தப் பள்ளியை நிறுவிய பாரிவேந்தர் அவர்கள் கல்வித் துறைக்கு ஆற்றிய பங்களிப்பை, அவருடைய அயராத உழைப்பை, ஈடு இணையில்லாத ஊக்கம் அளிக்கும் செயல்பாட்டை இந்தத் தருணத்தில் நினைவு கூறுகின்றேன். எஸ்.ஆர்.எம் நைட்டிங்கேல் பள்ளி இன்னும் பல சாதனைகளை அடைய வேண்டும். இன்னும் பல மைல்கற்களைக் கடந்து சமூகத்துக்குச் சேவை புரிய வேண்டும்" என்றார்.
மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு பி.பெஞ்சமின் அவர்கள் பேசும்போது, "எஸ்.ஆர்.எம் நைட்டிங்கேல் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துவித முழுமையான கல்வியை அளிக்கிறது. இதன் மூலம் அவர்களை நல்ல எடுத்துக்காட்டான குடிமகனாக மாற்றுகிறது. இந்தப் பொன்விழா நிகழ்வில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த நேரத்தில் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
விழாவில் எஸ்.ஆர்.எம் நைட்டிங்கேல் பள்ளியின் நிறுவன தாளாளரும் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி வேந்தருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் அவர்கள் தலைமையுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, "தரமான கல்வி கிடைக்கும் இடமாகத் தமிழகத்தை உலக வரைபடத்தில் வர வைக்க வேண்டும் என்ற பொதுவான நோக்கத்துடனே அரசும் எஸ்.ஆர்.எம் குழுமமும் செயல்படுகிறது. இனி, தமிழகத்தை யாரும் இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்று மட்டும் சொல்ல முடியாது... வெகு வரைவில் இந்தியாவின் கல்வி தலைநகரமாகத் தமிழகம் மாறும்" என்றார்.
விழாவில் எஸ்.ஆர்.எம் நைட்டிங்கேல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஆர்.சிவகுமார் அவர்கள் ஏற்புரையாற்றினார். அப்போது, "கடந்த 50 ஆண்டுக் கல்விப் பணியில் நாங்கள் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்ளை உருவாக்கியுள்ளோம். அவர்கள் எல்லாம் இன்று பெரிய நிலைக்கு உயர்ந்து உலகின் பல பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தக் கல்வி நிறுவனம் உயர் தரமான, மதிப்பு மிக்கக் கல்வி மற்றும் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது" என்றார்.
இந்த விழாவின்போது ஆண்டுவிழா மலர் பிரகதி வெளியிடப்பட்டது. பொன்விழா அறிக்கையைப் பள்ளியின் முதல்வர் வாசித்தார். இதைத் தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு விழாவும் நடந்தது.
10, 12ம் வகுப்புத் தேர்வில் முழு தேர்ச்சிக்குக் காரணமாக இருந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் மட்டுமின்றி, பாடங்களில் நூற்றுக்கு 100 வாங்கிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டனர்.