திருவாரூர் இடைத் தேர்தலை நடத்த தடையில்லை: உயர்நீதிமன்றம்

திருவாரூர் இடைத் தேர்தலை நடத்த தடையில்லை: உயர்நீதிமன்றம்

சென்னை: மறைந்த முதலமைச்சர் கருணாநிதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருவாரூர் இடைதேர்தல் ஜனவரி 28-ந் தேதி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் என்.ஜி. ஆர். பிரசாத் என்பவர் மனு தாக்கல் செய்தார், அவர் மனுவில் கூறியிருந்ததாவது:-

கஜா புயலினால், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. புயலின் பாதிப்பில் இருந்து அப்பகுதி இன்னும் முழுமையாக மீளவில்லை.

அதனால், திருவாரூர் தொகுதியில் நிவாரண பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது. இதனால் மிகப்பெரிய முறைகேடு நடைபெறும்.

தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். எனவே, திருவாரூர் தொகுதிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தடையில்லை என்று கூறி, தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.