மன்னர் வகையறா- சினிமா விமர்சனம்..!!

மன்னர் வகையறா- சினிமா விமர்சனம்..!!
Mannar Vagaiyara Movie Review

குடும்ப செண்ட்டிமென்ட்டை நம்பித்தான் ‘மன்னர் வகையறா’ படத்தை இயக்குநர் பூபதி பாண்டியன் எடுத்துள்ளார் என்று சொல்லலாம். படத்தின் நீளத்தையும் அவர் கவனத்தில் கொண்டு குறைத்திருக்கலாம். ஆனால், படம் போரடிக்காதவாறு திரைக்கதை அமைத்து அக்குறையைப் போக்கி விடுகிறார் பூபதி பாண்டியன். படத்தில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளம்.

ஊரில் முக்கிய தலைவரான பிரபுவின் மகன்கள் கார்த்திக், விமல். அதேபோல் பக்கத்து ஊரில் முக்கிய பிரமுகராக இருக்கும் ஜெயப்பிரகாஷின் மகன் வம்சி கிருஷ்ணா, இவரது தங்கைகள் சாந்தினி, கயல் ஆனந்தி. ஜெயப்பிரகாஷின் குடும்பத்திற்கும், அவரது மனைவி சரண்யா பொன்வண்ணனின் அண்ணன் குடும்பத்திற்கும் நீண்டநாள் பகை.

பகையை மறந்து இரு குடும்பத்தையும் இணைப்பதற்காக சாந்தினிக்கும், சரண்யா பொன்வண்ணனின் அண்ணன் மகனுக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர். அதற்கான திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் என்பதை அறிந்த விமலின் அண்ணன் கார்த்திக் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். இதையடுத்து சாந்தினியை கடத்தி தனது அண்ணனுடன் சேர்த்து வைக்கிறார் விமல். அதேநேரத்தில் கயல் ஆனந்தியும், விமலும் ஒருவரை ஒருவர் சொல்லிக்கொள்ளாமல் காதலித்து வருகின்றனர். ஒரு கட்டத்திற்கு பின்பு பிரபு குடும்பமும், ஜெயப்பிரகாஷ் குடும்பமும் ஒன்று சேர்கிறது.

பின்னர் சரண்யா பொன்வண்ணனின் அண்ணன் மகனுக்கு கயல் ஆனந்தியை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர். தானே முன்நின்று திருமணத்தை நடத்திவைப்பதாக பிரபு வாக்கு கொடுக்கிறார்.

திருமண வேலைகளும் விறுவிறுப்பாக நடக்க, செய்வதறியாது தவிக்கும் விமல், தனது காதலியுடன் இணைந்தாரா? கயல் ஆனந்தி அவளது மாமன் மகனை திருமணம் செய்தாரா? மூன்று குடும்பமும் ஒன்று சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் தோன்றியிருக்கும் விமல் அவரது ஸ்டைலில் வந்து கலக்கியிருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.

A3V சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விமலே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

விமல் - கயல் ஆனந்தி வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கயல் ஆனந்தி இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று கலக்கியிருக்கிறார். முதல்முறையாக ஒரு கலகலப்பான, வாயாடி ஆனந்தியை பார்க்க முடிகிறது. ரசிக்க வைத்திருக்கிறார்.

சாந்தினி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். ரோபோ ஷங்கர் காமெடியில் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். வம்சி கிருஷ்ணா, கார்த்திக், நீலிமா ராணி, ரேதிகா ஸ்ரீனிவாஸ் கதைக்கு ஒன்றி நடித்துள்ளனர்.

பிரபு, ஜெயப்பிரகாஷ், சரண்யா பொன்வண்ணன், மீரா கிருஷ்ணன் அனுபவ நடிப்பால் கவர்கின்றனர். ஒரு காட்சியில் வந்தாலும் யோகி பாபு கலகலப்பாக்கி விட்டு செல்கிறார்.

ஜூலி சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார்.

மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் அன்பு, பாசம், வீரம் இவற்றை முன்னிலைப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் பூபதி பாண்டியன். சண்டையோ, அடிதடியோ அது எதுவானாலும் குடும்பத்தினர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி ஓரளவுக்கு காமெடியாக சென்றாலும், அடுத்த பாதியை முழுக்க முழுக்க செண்டிமென்ட்டாக காட்டியிருக்கிறார்.

ஜேக்ஸ் பிஜோஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. சுராஜ் நல்லசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்து ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் `மன்னர் வகையறா' மங்காத வகையறா...பாடல்கள் எல்லாமே வண்ணமயமாய் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுப்ரீம் சுந்தரின் ஆக்ஷன் காட்சிகள் அனல் பறக்கின்றன.

மொத்தத்தில் `மன்னர் வகையறா' மங்களகரமான வகையறா...!!

Mannar Vagaiyara Movie Review