நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில்
NimirnthuNilMovieReview

நடிகர்கள்: ஜெயம்ரவி, அமலாபால்

இயக்குநர்: சமுத்திரகனி

'ரௌத்ரம்' பழகு என்று முண்டாசுக்கவி பாரதியார் அன்றே சொன்னார். அந்த அடிப்படையில் இயக்குநர் சமுத்திரக்கனி சமுதாயத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களை அழகாய்க் கோர்த்து கதையாக்கி நம்மையெல்லாம் நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட சமுதாய நோக்கத்தோடு உள்ள கதைகளை படமாக்க எவ்வளவு தயாரிப்பாளர்கள் இன்று முன்வருகிறார்கள்? இந்தப்படத்தை மிகவும் துணிச்சலோடு தயாரித்த தயாரிப்பாளர் கே.எஸ். ஸ்ரீநிவாசன், கே.எஸ். சிவராமன் இருவர்க்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் வளைந்து கொடுத்து அதாவது அட்ஜெஸ் செய்து கொண்டுதான் போகிறோம். அவைகளில் எவ்வளவு விஷயங்கள் மட்டரகமான, கீழ்த்தரமான விஷயங்களாக இருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. அரசியல்வாதிகளைவிட அவர்களை வழி நடத்திச்செல்லும் (லஞ்சம், ஊழல் என்று செயல்படும்) அரசு அதிகாரிகளைத்தான் முதலில் தண்டிக்க வேண்டும் என்ற ரீதியில் சமுத்திரக்கனியின் எழுத்தாக்கம், வசனங்கள் எல்லாம் ஜெயம் ரவியின் நடிப்பின் மூலம் பளிச்சிட வைத்து ரசிகர்களை சிந்திக்க வைத்துவிட்டார் இயக்குநர்.

ஜெயம்ரவிக்கு இதில் இரட்டை வேடம், இரண்டு வேடக் கதாப்பாத்திரங்களையும் மனதில் உள்வாங்கிக் கொண்டு மிகவும் அபாரமாக உழைத்து நடித்திருக்கும் ஜெயம்ரவியை எப்படிப் பாராட்டினாலும் தகும். படத்தில் மிகவும் விறுவிறுப்பான காட்சிகள் 'கோபிநாத்தின்' டி.வி. ஷோ, நேருக்கு நேர் நிகழ்ச்சிகள், டிரக்கர் லாரியை சரத்குமார் மற்றும் காவல்துறையினர்கள் சேசிங் செய்யும் காட்சிகள், இரண்டு ஜெயம்ரவிகளும் மோதிக்கொள்ளும் பயங்கரமான சண்டைக்காட்சிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஒளிப்பதிவாளர்கள் ஜீவன், சுகுமார் இருவரின் கடுமையான உழைப்புக்கு ஒரு ஸ்பெஷல் சல்யுட்!

சினிமாத்தனமாக பல காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அவைகள் கதைக்கு துளியும் ஒட்டாமல் இருந்தாலும் சமுத்திரக்கனியின் சமுதாயப் பார்வையும், இதை தயாரித்த தயாரிப்பாளர்களையும், துணிச்சலாக இருவேறுபட்ட வேடங்களை ஏற்று நடித்த ஜெயம்ரவியையும் மற்றும் படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களையும் மனதார வாழ்த்துகிறோம்!

NimirnthuNilMovieReview