சரணாலயம்- சினிமா விமர்சனம்!!

சரணாலயம்- சினிமா விமர்சனம்!!
Saranalayam Movie Review

சிறிய பட்ஜெட் படம்...!

வழக்கமான பழிவாங்கல் கதையை மையப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். இரசு ஜெகநாதன்.

நாயகன் அஸ்வின் குமார் யாரோ ஒருவரை கொலை செய்கிறார். கொலை குறித்து சிங்கம் புலியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது அஸ்வின் குமார் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சிங்கம் புலி கூறுகிறார். அப்போது, சிறுவயதிலேயே அஸ்வின் அவரது பெற்றோர்களை இழந்து தவித்ததாகவும், அவனை தனது கேபிள் டிவி நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்டதாகவும் கூறுகிறார்.

வளர்ந்து பெரியவனாகும் அஸ்வின், அவனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஸ்ரீபிரியங்காவை காதலிக்கிறார். அஸ்வினின் காதலுக்கு முதலில் மறுப்பு தெரிவிக்கும் ஸ்ரீபிரியங்கா, ஒரு கட்டத்தில் அஸ்வினை காதலிக்க ஆரம்பிக்கிறார். இந்நிலையில், இவர்களது காதல் ஸ்ரீபிரிங்காவின் அப்பாவுக்கு தெரியவர, சாப்பாட்டில் விஷம் வைத்து அஸ்வினை கொலை செய்ய முயற்சி செய்கிறார். உயிருக்கு போராடும் அஸ்வினை, மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றுகிறார் ஸ்ரீபிரியங்கா. பின்னர் சிங்கம் புலியின் உதவியுடன் திருமணம் செய்து கொள்ளும் அஸ்வின் - ஸ்ரீபிரியங்கா, வேறு ஊரில் இருக்கும் சிங்கம் புலியின் உறவுக்காரர் உதவியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறாக இவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கையை தொடங்கும் நிலையில், அவர்களது வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவம் ஒன்று நடக்கிறது. அதில் இருந்து நாயகனும், நாயகியும் தப்பித்தார்களா? சந்தோஷமாக வாழ்ந்தார்களா? அவர்களது வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. அஸ்வின் குமார் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீபிரியங்கா ரசிகர்களை கவரும்படியாக நடித்து அசத்தியிருக்கிறார். சிங்கம் புலி அவரது காமெடி கலந்த பாஷையில் மனதில் பதிகிறார். மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு உறுதுணையாக நடித்துள்ளனர்.

படத்தின் திரைக்கதை மெதுவாக செல்வது படத்திற்கு மைனஸ். இயக்கத்தில் மட்டும் இல்லாமல், இசையிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். ஷபீர் அலி கான் ஒளிப்பதிவில் காட்சிகளும் சுமாராகவே இருக்கிறது.

மொத்தத்தில் `சரணாலயம்...ரொம்ப ..சுமாரான படம்தான்.

Saranalayam Movie Review