ஒரு கண்ணியம் மூன்று களவானிகளும்

ஒரு கண்ணியம் மூன்று களவானிகளும்
orukanniyummoonrukalavanigalumreview

நடிகர்கள்: அருள்நிதி, பிந்துமாதவி, ஹர்சிதா ஷெட்டி

இயக்குனர்: சிம்புதேவன்

இயக்குனர் சிம்புதேவன் மற்றும் அருள்நிதி முதன்முறையாக இணைந்திருக்கும் படம் 'ஒரு கண்ணியம் மூன்று களவானிகளும்'. இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்களை இயக்கிய சிம்புதேவன் இப்படத்தின் மூலம் அருள்நிதியுடன் கைகோர்த்துள்ளார். அருள்நிதி, பிந்துமாதவி, ஹர்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை சிம்புதேவன் இயகியுள்ளார்.

ஒருவன் குறித்த நேரத்தில் ஒரு வேலையை ஆரம்பித்தால் அது ஒரு விதமாகவும், 2நிமிடம் தள்ளி ஆரம்பித்தால் அது இன்னொரு விதமாகவும், இன்னும் சில நிமிடங்கள் கழித்து ஆரம்பித்தால் அது மேலும் சில மாற்றங்களுடனும் நடந்தேறும் என்பதை காமெடியாகவும், கலைரசனையுடனும் தனக்கே உரிய பாணியில், ஒரே கதையை மூன்று விதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் சிம்புதேவன்.

நாயகன் அருள்நிதியின் காதலியான அர்ஷிதா ஷெட்டிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயிக்கப்பட்டு, சர்ச்சில் திருமணமும் நடக்க இருக்கிறது. அர்ஷிதாவின் அப்பா மிகப்பெரிய தொழிலதிபர். அவருடைய தொழில் எதிரியான நாசர் அவரை அவமானப்படுத்துவதற்காக அருள்நிதியை கடத்தி வந்து அவர் காதலிக்கும் பெண்ணான அர்ஷிதாவை கூட்டிக்கொண்டு ஓட அருள்நிதிக்கு ரூ.30 லட்சம் தருவதாகவும் கூறுகிறார்.

ஒரு புறம் அருள்நிதியின் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்படுகிறது. அதேநேரத்தில் தனது காதலியையும் கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த டீலுக்கு அருள்நிதி ஒப்புக்கொள்கிறார். அருள்நிதியுடன் அவரின் நண்பர்களான பிந்து மாதவியும், பகவதி பெருமாளும் சேர்ந்து கொள்கிறார்கள். இவர்களுக்கும் பணத்தேவை இருப்பதால் அருள்நிதியுடன் சேர்ந்து இந்த கடத்தலை நடத்த முடிவெடுக்கின்றனர்.

சரியாக 9.00 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் அவர்கள் அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து இறுதியில் அர்ஷிதாவை கடத்தினார்கள் என்பதே படத்தின் கதை. இந்த கதையை மூன்று விதமாக இயக்குனர் சொல்லியிருக்கிறார். அதாவது, 9.00 மணிக்கு அவர்கள் வீட்டை கிளம்பியதால் என்ன நடந்தது? அதேபோல் 1 நிமிடம் முன்னதாக 8.59 மணிக்கு கிளம்பியதால் என்ன நடந்தது? 1 நிமிடம் தாமதமாக 9.01 மணிக்கு கிளம்பியதால் என்ன நடந்தது? என மூன்று விதங்களில் அழகாக படமாக்கியிருக்கிறார்.

திரைக்கதையை தனக்கே உரிய பாணியில் தெளிவாக காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக இருக்கிறது. நடராஜன் சங்கரன் இசை மற்றும் பின்னணி இசை ரசிக்கும்படியாக உள்ளது. மொத்தத்தில் அருள்நிதி , சிம்புதேவன் கூட்டணியில் உருவாகியருக்கும் இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

orukanniyummoonrukalavanigalumreview