காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும் நண்பரே: விஷாலுக்கு நடிகர் உதயா கடிதம்

காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும் நண்பரே: விஷாலுக்கு நடிகர் உதயா கடிதம்

பெறுநர்:
திரு. விஷால்
தலைவர், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,
பொது செயலாளர், நடிகர் சங்கம்.

இந்த வாய்ப்பினை தங்கள் திரைப்படம் #அயோக்யா வெகு விரைவில் வெளியிடப்படவும், அரங்கம் நிறைந்த காட்சிகளாக, மகத்தான வெற்றி பெறவும் வாழ்த்துவதற்கு முதற்கண் பயன்படுத்தி கொள்கிறேன். 

இத்திரைப்பட வெளியீடு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும் உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டும் எனவும் விரும்புகிறேன். 

சமீபத்தில் ‘தி இந்து’ நாளிதழுக்கு தாங்கள் அளித்த பேட்டியில், #உத்தரவுமகாராஜா திரைப்படத்தை சரியான கதைகளம் இல்லாததால், வெறும் நான்கு பேர் மட்டுமே இப்படத்தை பார்த்ததாக கூறியிருந்தீர்கள்.   

நான் அனைவருடைய கருத்துகள்,  விமர்சனங்கள் அது நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, அதை மதிக்கிறேன், பாராட்டுகிறேன். விமர்சனங்களில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். 

ஆனால்,  நான் கண்மூடித்தனமான விமர்சனங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. துரதிர்ஷ்ட்டவசமாக எனது படத்தை குறித்த உங்கள் விமர்சனமும் அவ்வாறானதே. ஏனென்றால், நீங்கள் அந்தப்படத்தை பார்க்கவில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.

எனது படத்தை திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் அவதியுற்றேன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், அந்த பேரிடருக்கு வழிவகுத்ததே நீங்கள் தான்.  இதற்கு நான் எனது ஆயுள் உள்ளவரை நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனது படத்திற்கு திரைதுறையினர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் மற்றும் அனைத்து ஊடகங்களிடமிருந்தும் நேர்மையான விமர்சனங்கள் கிடைத்திருக்கிறது. இந்த நேர்மையான விமர்சனங்கள் எனக்கு திருப்தி அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது. ஏனென்றால், இந்தப்படம் சராசரிக்கும் அதிகமான வியாபாரத்தை எனக்கு தந்திருக்கிறது. மிக குறைவான திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டிருந்த போதும், மக்கள் அதை ரசித்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாகவோ அல்லது இன்னபிற நோக்கங்களுக்காவோ இருக்க கூடாது. ஒரு பொறுப்புள்ள உயர் பதவியில் இருந்த நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும் நண்பரே.  சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. "விதைத்ததை மட்டுமே அறுக்க முடியும்"என்ற  எளிய பிரபஞ்ச விதியை நான் நம்புகிறேன்.

#அயோக்யா படம் வெற்றி பெற எனது ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள். இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். 

வாழ்த்துகளுடன்,

உதயா