’போட்’ விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’போட்’ விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’போட்’ விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’போட்’ விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி செய்யும் நாடுகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தும் எதிரி படைகள், சென்னையிலும் குண்டு வீச திட்டமிடுகிறது. அதன்படி இந்த தகவல் மக்களிடையே பரவ,  தப்பிப்பதற்காக பலர் சென்னையை விட்டு வெளியேறுகிறார்கள். மீனவர்கள் பலர் தங்களது படகுகள் மூலம் நடுக்கடலுக்கு சென்று தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன்படி, காசிமேடு பகுதி மீனவரான யோகி பாபு தனது பாட்டியுடன் தனது துடுப்பு படகில் நடுக்கடலுக்கு செல்ல முயற்சிக்கிறார். அவருடன் வெவ்வேறு மொழி பேசும் இந்தியர்களும் படகில் பயணிக்கிறார்கள். நடுக்கடலுக்கு சென்றதும் படகு பழுதடைந்து விடுகிறது. அதனால், தொடர்ந்து பயணிக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கும் படகை கரைக்கு செலுத்த வேண்டும் என்றால், படகில் இருப்பவர்களில் மூன்று பேர் வெளியேற வேண்டும், என்று படகின் உரிமையாளர் யோகி பாபு சொல்கிறார். நடுக்கடலில் இருக்கும் படகில் இருந்து எப்படி வெளியேற முடியும், என்று அனைவரும் யோசிக்க, அவர்களை சுற்றி மற்றொரு ஆபத்து உருவாகிறது. ஆபத்துகளில் இருந்து தப்பித்து இவர்கள் அனைவரும் கரைக்கு சென்றடைந்தார்களா? அல்லது அந்த மூன்று பேரை வெளியேற்றிவிட்டு மற்றவர்கள் தப்பித்தார்களா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

வெவ்வேறு மொழி பேசும் இந்தியர்கள் மற்றும் ஆங்கிலேயே காவல்துறை அதிகாரி ஆகியோர் இடையே நடைபெறும் விவாதங்கள் மூலமாக இந்திய சுதந்திரப் போரில் தமிழகத்தின் பங்கு, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி, தாழ்ந்தவன் - உயர்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு, பூர்வக்குடிகளை விரட்டியடிக்கும் வந்தேரிகள், வியாபார நகரங்களில் வசிக்கும் பூர்வக்குடிகளின் முன்னேற்றத்தை தடுக்கும் குடிபெயர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல்களையும் அலசும் இயக்குநர் சிம்புதேவன், குறிப்பாக சென்னையின் பூர்வகுடிகளின் வறுமை நிலை மற்றும் அவர்கள் சென்னையை விட்டு படிபடியாக வெளியேற்றப்படுதல் ஆகியவற்றை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

கதையின் நாயகனாக காசிமேடு பகுதி மீனவராக நடித்திருக்கும் யோகி பாபு, தனது வழக்கமான உருவ கேலி நகைச்சுவை வசனங்களை தவிர்த்துவிட்டு, இயக்குநர் சிம்புதேவன் சொன்னதை மட்டுமே பேசி நடித்திருப்பது கதைக்கு பலமாகவும், ரசிகர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது.

யோகி பாபுடன் படகில் பயணிக்கும் குல்லபுலி லீலா, கெளரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாரா, ஜெஸ்ஸி, அக்‌ஷத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி வசனங்களை சரியாக உச்சரித்திருக்கிறார்கள். படகில் அமர்ந்தபடி நடித்திருந்தாலும் வசனங்களுக்கு ஏற்ப உடல்மொழியை வெளிப்படுத்தி கதபாத்திரங்களாக பயணிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா படகை சுற்றி வலம் வந்தாலும், கடலின் வெவ்வேறு வண்ணங்களையும், அதன் இரமாண்டத்தையும் திரையில் கொண்டு வர அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். 

ஜிப்ரானின் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

காமெடி மற்றும் ஃபேண்டஸி ஜானரில் நல்ல கருத்துக்களை தொடர்ந்து பேசி வரும் இயக்குநர் சிம்புதேவன், இந்த முறையும் தனது வேலையை மிக சிறப்பாக செய்துள்ளார். பூர்வகுடிகளின் வலிகளையும், அவர்களது இருப்பிடங்கள் பறிக்கப்பட்டு அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் விரட்டியடிக்கப்படுவதை அழுத்தமாக விவாதித்திருந்தாலும், அதை முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் சொல்லி அனைத்து மக்களுக்கும் புரிய வைத்திருக்கிறார்.

சமூகத்திற்கான ஒரு படைப்பாக இருந்தாலும், அதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்குமான ஒரு கமர்ஷியல் படமாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் சிம்புதேவனுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.