‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
சிறு வயதில் இருந்து ஒன்றாக இருக்கும் நாயகன் ஆனந்தும் அவரது நண்பர்களும் கல்லூரி படிப்பை முடித்த பிறகும் ஒன்றாக பயணிக்க முடிவு செய்கிறார்கள். அதற்காக ஆனந்தின் ஐடியாவை கேட்டு அனைவரும் சேர்ந்து நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார்கள். ஆனால், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அவர்கள் எதிர்பார்த்தது போல் அமையாமல் போவதோடு, அதன் மூலமாக நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்தும் விடுகிறார்கள். நண்பர்களை பிரிந்து வெகு தூரம் சென்றுவிடும் ஆனந்த், தனது ஐடியாவை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதிக்க வேண்டும், என்ற முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா?, அவர் மீண்டும் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாதித்தாரா? என்பது தான் படத்தின் கதை.
நாயகன் ஆனந்தின் அப்பாவாக நடித்திருக்கும் குமரவேல், அம்மாவாக நடித்திருக்கும் விஷாலினி, பாட்டியாக நடித்திருக்கும் குல்லபுலி லீலா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த், அவரது காதலியாக நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, ஆனந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ் ஆகியோர் நடிப்பாக இல்லாமல் இயல்பாக பயணிக்க வேண்டும் என்று முயற்சித்திருப்பதோடு, அதற்காக பல படங்களை பார்த்து காப்பியடித்திருப்பது அனைவரது நடிப்பிலும் தெரிகிறது.
சில காட்சிகளில் வந்தாலும் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.எம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.எச்.காஷீப், இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம். ஒளிப்பதிவாளர் தமிழ் செல்வன், கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
நண்பர்களையும், நட்பையும் களமாக கொண்டு காதல், பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் புரிதல், நகைச்சுவை ஆகியவற்றை சேர்த்து ஒரு ஜாலியான கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த்.
தற்போதைய காலக்கட்ட இளைஞர்களின் மனப்போராட்டங்களை நட்பு, காதல், குடும்ப பின்னணி ஆகியவற்றின் பின்னணியோடு அழகாக சொல்லியிருப்பதோடு, இளைஞர்களுக்கான நம்பிக்கை படமாகவும் கொடுத்திருக்கும் அறிமுக இயக்குநர் ஆனந்துக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.