வெடிக்கும் ‘இரண்டாம் குத்து’ சர்ச்சை!!

 வெடிக்கும் ‘இரண்டாம் குத்து’ சர்ச்சை!!
வெடிக்கும் ‘இரண்டாம் குத்து’ சர்ச்சை!!

 வெடிக்கும் ‘இரண்டாம் குத்து’ சர்ச்சை!! 

 

நூற்றாண்டு  பெருமை கொண்ட தமிழ் திரை உலகத்தில் எத்தனையோ சாதனையாளர்கள் தங்கள் படைப்புகளால் மட்டுமே அறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் படைப்புகளே அவர்களுக்கு முகமாக இருந்திருக்கின்றன.  ஆனால் ஒரு கதாநாயகனுக்கு கிடைக்கும் கைதட்டல்கள் எல்லாம் இயக்குனரின் பெயரை பார்க்கும் பொழுது தியேட்டர்களில்  எழ வைத்த பெயர் பாரதிராஜா.  இவர் மூலம்தான் தமிழக கிராமங்கள் எத்தனை அழகானவை என்பதை இந்தியா முழுவதும் தெரிந்து கொண்டன.

கருப்பு வெள்ளை காலத்தின் இயக்குனர்களின் பெயருக்கு அப்புறம் அடுத்த தலைமுறையினர் மானசீகமாக வணங்கும் ஒரு பெயராக இருப்பது பாரதிராஜா என்ற பெயர். திரையுலகத்தின் உச்சத்தை கடந்து எளிய மக்களுக்கு தன் படைப்புகளை மட்டுமல்ல தன்னையும் எடுத்து சென்று  தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துக் கொண்டு இருப்பவர் பாரதிராஜா.

ஆனால் இன்று அந்தப் பெயர் கலங்க படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் குத்து என்கின்ற பெயரில் வக்கிர கூத்தாடி, ஆபாச விரும்பி பாரதிராஜா என்கிற அந்த சாதனையாளரை சந்திக்கு இழுத்து சவால் விட்டிருக்கிறார்.தான் நேசித்த கிராமங்களிலேயே மரபு என்கிற பெயரில் காலம் காலமாக செய்யப்பட்டு வந்த சமூக சீர்கேட்டை தீ வைத்து கொளுத்திய இயக்குனர் ஒருவரை பார்த்து வெறும் காமத்தை மட்டுமே நம்பி படமெடுக்கும் நீலப்பட விரும்பி கூக்குரலிட்டு இருக்கிறார்.

பாரதிராஜாவின் ஒரே ஒரு  படமும்  அந்த ஆபாச விரும்பி இயக்குனரின் மொத்த அனுபவமும் ஒன்று  என்பதை தமிழ் ரசிகர்கள் அறிவார்கள். கண்ணியமிக்க அந்தப் படைப்பாளியின் மீது களங்கம் பூசுவதை இந்த  தமிழ்ச் சமூகம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. 

அதைவிட வேதனை  விமர்சனங்களில்  தங்கள் நேர்மையை காண்பிக்கும் சினிமா பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இருக்கும் பல்வேறு சங்கங்களும் இதை சகித்துக்கொண்டு இருப்பதுதான்.   

தயாரிப்பாளர்கள் சங்கமும் இயக்குனர்கள் சங்கமும் நடிகர் சங்கமும் மக்கள் தொடர்பாளர்கள் சங்கமும் நினைத்தால் இந்த வக்கிர ஆபாச படைப்பாளிக்கு ஒரு முடிவு கட்டலாம். ஆனால் இவையெல்லாம் இருக்கின்றனவா என்று எண்ணத் தோன்றுகிறது. எல்லோருக்கும் பணம் அவசியம் தான். ஆனால் அதை எந்த வழியில் நாம் ஈட்டுகிறோம்  என்பதை பொறுத்தே இருக்கிறது நமது சந்ததிக்கு நாம் சேர்க்கும் பெருமை.
ஒரு சம்பவம் கமல் ரஜினி இருவருக்கும் நெருக்கமானவர் அந்த காமெடி நடிகர். தொடர்ந்து  அவர்கள் படங்களில்  நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள். அவரது சிரிப்பும் வசன உச்சரிப்பும் மிமிக்ரி  மேடைகளில் பிரபலம். ஒருமுறை கமல் அவர்கள்  படத்தின் டப்பிங் நேரத்தில் அந்தப்படத்தின் உதவி இயக்குனராக இருந்த அந்த நடிகரை, இந்த நகைச்சுவை நடிகர் சின்ன விஷயத்திற்காக அடித்து விட்டார். அன்று முடிவு செய்தது திரையுலகம் இனி அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று.

அந்த நகைச்சுவை நடிகர் இப்போதும் உயிரோடு இருக்கிறார். ஆனால் எந்த படங்களிலும் பல ஆண்டுகளாக அவர் இல்லை. அப்படி ஒரு முடிவை இரண்டாம் குத்து இயக்குனர் விஷயத்திலும் அந்த படங்களில் நடித்த நடிகர்கள் விஷயத்திலும் திரையுலகம் எடுக்க வேண்டும். இல்லையேல் இது போன்ற குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படும்.

சொந்த வாழ்க்கையிலேயே சோரம் போனதால் தான் அந்த இயக்குனர் தொடர்ந்து இப்படிப்பட்ட சிந்தனை உள்ள படங்களை எடுத்து வருகிறார்  என்று கேள்விப் படுகிறோம்.. இருந்து விட்டுப் போகட்டும்.ஆனால்  ராஜகோபுரத்தில் காக்கை எச்சம் இட்டு செல்வது போன்று தமிழ் சினிமாவின் கோபுரமாக இருக்கக்கூடிய ஒரு படைப்பாளியின் மீது கலங்கம் பூச நினைப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. 

எத்தனை பறவைகள் வந்து எச்சமிட்டுப் போனாலும்  கோபுரத்தின் புனிதம் கெடப்போவதில்லை. கோபுரம் என்றும் வணங்கத்தக்க தாகவே இருக்கும். பாரதிராஜா என்ற மகா கலைஞனும் அப்படித்தான்.

தேனி கண்ணன்