‘காந்தாரா - அத்தியாயம் 1’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘காந்தாரா - அத்தியாயம் 1’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
மூலிகைகள், விலையுர்ந்த விளைபொருட்கள் நிறைந்த காந்தாரா வனப்பகுதியை கைப்பற்ற அதன் அருகே இருக்கும் நாட்டின் அரசர் முயற்சிக்கிறார். அதில் அவர் தோல்வியடைந்த நிலையில், அவரது அடுத்த தலைமுறையினர் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு இறக்கிறார்கள்.
இதற்கிடையே காந்தாரா பழங்குடி கூட்டத்தை சேர்ந்த ரிஷப் ஷெட்டி, காட்டை விட்டு வெளியேறி, தங்களிடம் உள்ள விளைபொருட்களை விற்க முயற்சிப்பதோடு, சாதாரண மக்கள் மீது போடப்பட்டிருந்த தடைகளை அதிரடியாக தகர்த்தி, துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். காந்தாரா மக்களை எதிர்க்க முடியாமல் தடுமாறும் அரசர் ஜெயராம், அவர்களுடன் சமரசமாக பேசி, அவர்களுக்கான அனைத்து மரியாதையையும் வழங்குவதாக அறிவிப்பதோடு, அவர்களின் சக்திகளை கட்டுப்படுத்தி, காந்தாராவை கைப்பற்ற சதி செய்கிறார். அவரது சதிதிட்டம் வெற்றி பெற்றதா?, நாயகன் ரிஷப் ஷெட்டி காந்தாராவையும், மக்களையும் காப்பாற்றினாரா ? என்பதை ரொம்ப சத்தமாக சொல்வதே ‘காந்தாரா’.
நாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி, பழங்குடியினர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். “ஓ...ஓ....” என்று சத்தம் போட்டு சாமியாடும் காட்சிகளில் தனது நடிப்பு மூலம் அசத்தியிருப்பவர், உடல் மொழி மற்றும் கண்களில் காட்டும் கோபம் ஆகியவற்றை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி அனல் தெறிக்க நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த் அழகாக இருக்கிறார். ஆரம்பத்தில் அமைதியாக வருபவர், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து மிரட்டுகிறார்.
அரசராக நடித்திருக்கும் ஜெயராம் மற்றும் அவரது மகனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார். அவரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரளித்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை படத்தை காப்பாற்றியிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் கே.காஷ்யப் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார். ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தாலும், அதை சரியாக கதைக்களத்தோடு பொறுத்தி காட்சிகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் சுரேஷ் காட்சிகளின் நீளத்தை மட்டும் இன்றி காட்சிகளையே சற்று குறைத்திருக்கலாம்.
நாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கவும் செய்திருக்கிறார். அவரது காந்தாரா திரைப்படத்தில் இருந்த உணர்வுப்பூர்வமான கதை இந்த காந்தாராவில் மிஸ்ஸிங். வனப்பகுதியை கைப்பற்ற முயற்சிக்கும் அரசர், அவரை எதிர்த்து போராடும் பழங்குடியின மக்கள், இவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை, ஆன்மீகத்தோடு இணைத்து, கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் பிரமாண்டமான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் படம் பிரமாண்டமாக இருப்பதும், சண்டைக்காட்சிகள் படத்தை ரசிக்க வைத்தாலும், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த ‘காந்தாரா - அத்தியாயம் 1’ ரசிகர்களை காந்தமாக இழுத்திருக்கும்.
படத்தை இயக்கிய ரிஷ ஷெட்டி மற்றும் குழுவினருக்கு சென்னை பத்திரிகா சார்பில் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.