’2K லவ் ஸ்டோரி’பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’2K லவ் ஸ்டோரி’பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
ஆண் - பெண் நட்பாக பழகினாலே நாளடைவில் அது காதலாக மாறிவிடும் சூழலில், ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியும், என்பதற்கான எடுத்துக்காட்டாக நாயகன் ஜெகவீர் - நாயகி மீனாட்சி கோவிந்தராஜன் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வெளிக்காட்டும் அன்பு, அக்கறை வெறும் நட்பால் மட்டும் வராது, அது காதல் தான், அந்த காதல் அவர்களுக்கு இடையில் யாராவது வந்தால் நிச்சயம் வெளிவரும், என்று அவர்களது நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல், ஜெகவீர் - மீனாட்சியின் நட்புக்கு பல சோதனைகள் வருகிறது, அவற்றை கடந்து நண்பர்களாகவே பயணித்தார்களா? அல்லது மற்றவர்கள் எதிர்பார்த்தது போல் காதலர்கள் ஆனார்களா ? என்பதை நட்புக்கு மரியாதை அளிக்கும் வகையில் சொல்வதே ’2K லவ் ஸ்டோரி’.
அறிமுக நடிகர் ஜெகவீர், குழந்தைத்தனமான முகத்தோடும், குறையில்லாத நடிப்போடும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். கதையின் நாயகனாக இருந்தாலும், தனக்கு எது வரும், அதை எப்படி செய்தால் எடுபடும், என்பதை சரியாக கணித்து நடித்து படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜனின் முகம் மட்டும் அல்ல நடிப்பும் படம் முழுவதும் பளிச்சிடுகிறது. குழப்பமான மனநிலையில் இருப்பவர்களை தெளிவுப்படுத்துபவர், தான் குழம்பிய நிலையில் இருக்கும் போது நண்பனின் பேச்சைக் கேட்டு நம்பிக்கையோடு பயணிக்கும் இடங்களில் அழுத்தமான நடிப்பு மூலம் பார்வையாளர்களை கவர்ந்துவிடுகிறார்.
புதுவரவு லத்திகா பாலமுருகனின் கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு மூலம் பார்வையாளர்கள் மனதில் நல்வரவாக பதிந்துவிடுகிறார்.
பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், சிங்கம் புலி, வினோதினி, ஜெயப்பிரகாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் இதமாக பயணிக்கிறது. பின்னணி இசையும் அதிகமான சத்தமின்றி அளவாக பயணித்து கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் வி.எஸ்.அனந்த கிருஷ்ணாவின் கேமரா, பிரமண்டமான ஆல்பம் பார்ப்பது போன்ற உணர்வை படம் முழுவதும் கொடுத்திருக்கிறது. பாடல்கள் மற்றும் வசனக் காட்சிகள் என அனைத்திலும் நட்சத்திரங்களை அழகாக காட்டியிருப்பதோடு, படம் முழுவதையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் தியாகு.டி, காதலை காட்டிலும் கதையில் முக்கியத்துவம் பெறும் நட்பை கவிதையாக பார்வையாளர்கள் மனதில் பதியும் அளவுக்கு நேர்த்தியாக காட்சிகளை கோர்த்திருக்கிறார்.
’புது வசந்தம்’ மூலம் ஆண், பெண் உறவில் புரட்ச்சியை ஏற்படுத்தி நட்புக்கு மரியாதை அளித்த தமிழ் சினிமாவில், மீண்டும் ஒரு நட்பு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
ஆண், பெண் இடையிலான நட்பை கொண்டாடுவது தமிழ் சினிமாவில் புதிதல்ல என்றாலும், அவர்களது நட்பு எவ்வளவு ஆழமானது என்பதை எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் பார்வையாளர்களிடத்தில் கடத்தியிருக்கும் இயக்குநர் சுசீந்திரன், அதை வசனங்கள் மூலம் விவரித்து போராடிக்காமல், காட்சிகள் மூலம் விவரித்து பார்வையாளர்களை கொண்டாட வைக்கிறார்.
திரைக்கதை மெதுவாக நகர்வது போல் சில இடங்களில் தோன்றினாலும், அந்த இடங்களில் நகைச்சுவையை தெளித்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதோடு, பெண்கள் பற்றிய புரிதல் மற்றும் அதைச் சார்ந்த வசனங்கள், காதல் மற்றும் நட்பை வேறுபடுத்தி காட்டுவது ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதம், என படம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.
தலைப்பு முழுவதையும் காதல் ஆட்கொண்டு இருந்தாலும், திரைக்கதையில் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் சுசீந்திரன், குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு அழகான காதல் கதையாக மட்டும் இன்றி தற்போதைய காலக்கட்டத்து இளைஞர்களின் நட்புக்கு மரியாதை கொடுக்கும் படைப்பாகவும் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ’2K லவ் ஸ்டோரி’ காதலர்களுக்கானது மட்டும் அல்ல, அனைவருக்குமானது. சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.