படம் வெற்றி பெற்றாலும்... தயாரிப்பாளருக்கு தோல்வி தான்

படம் வெற்றி பெற்றாலும்...  தயாரிப்பாளருக்கு தோல்வி தான்
படம் வெற்றி பெற்றாலும்... தயாரிப்பாளருக்கு தோல்வி தான்

படம் வெற்றி பெற்றாலும்...

தயாரிப்பாளருக்கு
தோல்வி தான்


எஸ்.பி.பி சரண் தந்தையின் பணத்தை படம் எடுத்து அழித்ததாக கூறப்பட்டு வந்த தகவலுக்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார். நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த எஸ். பி. பாலசுப்பிரமணியம், கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது லேசான தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் கண்டிப்பாக கொரோனாவில் இருந்து மீண்டு வந்து, மீண்டும் திரையுலகில் பல பாடல்களை பாடுவார் என எதிர்பார்த்த நிலையில், இவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, சினிமா பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்பிபி காலமானார்.

 இவர் இறந்து ஒரு வருடம் ஆகும் நிலையில், இவரது மகன் எஸ்பிபி சரண் தன்னுடைய தந்தையின் சொத்துக்களை தான் அழித்துவிட்டதாக பரவலாக பேசப்படும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... தன்னுடைய பெற்றோரின் அனுமதியுடன் நான் தயாரித்த முதல் படமான 'உன்னை சரணடைந்தேன்' இந்த படம் வசூல் ரீதியாக லாபம் பெறவில்லை என்றாலும் மாநில அரசின் விருதை பெற்றது. இந்த படத்தை சமுத்திரக்கனி கூறிய கதை பிடித்ததால் மட்டுமே தயாரித்தேன்.

இதைத் தொடர்ந்து, தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'வர்ஷம்' திரைப்படத்தை தமிழில் 'மழை' என்ற பெயரில் பிரமாண்டமாக தயாரித்தேன். ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியதால் ஒட்டு மொத்த பணத்தையும் இழந்தேன். தான் தோல்வியில் இருந்த போது, தனக்கு உறுதுணையாக இருந்தது தன்னுடைய தாயும் தந்தையும் தான். அவர்கள் வருத்தப்படாதே என தன்னை தேற்றினர்.

பின்னர் சென்னை 600028 திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு பணம் வரவில்லை என்பது வருத்தமே... இதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட 'ஆரண்ய காண்டம்' படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் இப்படத்தின் லாபம் கிடைக்கவில்லை. இதனால் சற்று மன அழுத்தத்திற்கு ஆளானேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தந்தை எஸ்.பி.பி அவர்கள் சம்பாதித்த பணத்தை படம் எடுத்து அழித்து விட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது தனக்கு மேல் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது மேடை கச்சேரிகள் தான் பொருளாதார ரீதியாக தங்களுக்கு உதவியதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தந்தையின் இழப்பு வாழ்க்கையில் சீர்குலைத்து விட்டதாக தெரிவித்துள்ள சரண், மீண்டும் தந்தையின் குரலில் பாட உள்ளதாக உணர்ச்சிவசத்தோடு பேசியுள்ளார்.