’கேம் சேஞ்சர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’கேம் சேஞ்சர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
ஆந்திரபிரதேச முதல்வரான ஸ்ரீகாந்துக்கு இரண்டு மகன்கள். அப்பாவுக்கு பிறகு முதலமைச்சர் பதவி யாருக்கு? என்பதில் இருவருக்கும் இடையே போட்டி நிலவும் நிலையில், புதிதாக பதவி ஏற்கும் மாவட்ட கலெக்டர் ராம்சரண், தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மோசடி பேர்வழிகளை விழி பிதுங்க வைக்கிறார். அவரது நடவடிக்கைகளால் முதல்வரின் இளைய மகனான அமைச்சர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதற்கிடையே, உடல்நலக் குறைவால் முதல்வர் உயிரிழக்க, அடுத்த முதல்வராக அவரது இளைய மகன் எஸ்.ஜே.சூர்யா பதவி ஏற்க தயாராவதோடு, முதல்வராக பதவி ஏற்று முதல் வேலையாக தன்னை அவமானப்படுத்திய கலெக்டர் ராம்சரணை பழிவாங்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.
இந்த நிலையில், முதல்வர் இறப்பதற்கு முன்பு தனது அரசியல் வாரிசாக ராம்சரணை அறிவிப்பதோடு, அவர் தான் தனக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்ற தனது கடைசி ஆசையோடு, அவர் தான் ஆந்திர பிரதேசத்தின் அடுத்த முதல்வர், என்றும் அறிவித்த வீடியோ வெளியாகிறது. இதனால், எஸ்.ஜே.சூர்யா முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட, அதே சமயம் ராம்சரணையும் முதல்வராக விடாமல் தடுக்கும் முயற்சிகளில் எஸ்.ஜே.சூர்யா ஈடுபடுகிறார். இறுதியில், ராம்சரண் முதல்வர் ஆனாரா?, அவரை எதற்காக முதல்வர் அரசியல் வாரிசாக நியமித்தார்? ஆகிய கேள்விகளுக்கான விடையை இயக்குநர் ஷங்கர் தனது முந்தைய படங்களின் பாதிப்பாக சொல்வதே ‘கேம் சேஞ்சர்’.
மக்கள் பிரச்சனைக்காக போராடும் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளின் பலம் என்ன? என்பதை வெளிக்காட்டும் மாவட்ட கலெக்டர் என இரண்டு வேடங்களில் அமர்க்களமாக நடித்திருக்கிறார் ராம்சரண். அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர், சில காட்சிகளில் கல்லூரி மாணவராக வந்து நடனம் மற்றும் காதல் காட்சிகள் மூலம் இளசுகளை ஈர்க்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, வழக்கமான ஷங்கர் படங்களில் வரும் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கூட இல்லாமல் சில காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அப்பா ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலியின் கதாபாத்திரம் திரைக்கதையின் திருப்பங்களாக பயணித்திருப்பதோடு, அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
எப்படியாவது முதல்வர் இருக்கையில் அமர வேண்டும் என்ற ஆசையில் வலம் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும், அவரது நடிப்பு காட்சிகளை தொய்வில்லாமல் கடத்த பெரிதும் உதவியிருக்கிறது.
முதல்வரின் மூத்த மகனாக அமைச்சர் மாவீரன் மாணிக்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம், தான் வரும் அனைத்துக் காட்சிகளிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், நவீன் சந்திரா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் திரை இருப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் திரு காட்சிகளை கலர் புல்லாகவும்ம், பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் பாடல்களில் பழைய பாடல்களின் சாயல் தெரிகிறது. பின்னணி இசையிலும் இயக்குநர் ஷங்கரின் முந்தைய படங்களின் சாயல் தெரிகிறது. ஆக மொத்தம் குறிப்பிட்டு சொல்வதற்கு இசையில் புதிதாக ஒன்றும் இல்லை.
படத்தொகுப்பாளர்கள் சமீர் மொஹமத் மற்றும் ரூபன் இருவரும் தயாரிப்பாளர் செலவு செய்தது திரையில் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றியிருக்கிறார்கள்.
சமூக பிரச்சனைகளை கமர்ஷியலாக சொல்வதோடு, கலகலப்பாகவும் சொல்வதில் கிள்ளாடியான இயக்குநர் ஷங்கர், தனது வழக்கமான பாணியில் இந்த படத்தை கையாண்டிருந்தாலும் புதிதாக எதுவும் இல்லாத உணர்வை படம் கொடுப்பதோடு, அக்மார்க் தெலுங்குப் படத்தை பார்க்கும் உணர்வையும் கொடுக்கிறது.
வழக்கமான ஃபார்மூலாவில், பாடல்கள், நகைச்சுவை ஆகியவற்றின் மூலம் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் முகத்திரையை கிழித்திருக்கும் இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.