‘அது வாங்குனா இது இலவசம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘அது வாங்குனா இது இலவசம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
ராமரும், அவரது நண்பர்களும் விளையாட்டுத்தனமாக செய்யும் தவறுகளால் மற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டாலும், எதையும் கண்டுக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று தவறுகளோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் இன்றி தவறு செய்யும் அனைவரையும் நாயகி பூஜாஸ்ரீ தண்டிக்கிறார். அதை அவர் எப்படி செய்கிறார் ?, எதற்காக செய்கிறார் ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்து நடித்திருக்கும் ராமர், படம் முழுவதும் பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். அதிலும், அவரது பேவரைட் பெண் வேடமிட்டு, லாரி ஓட்டுநரை ஓரமாக அழைத்து செல்வதும், பிறகு போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக அதே வேடத்தில் ஓட்டம் பிடித்து, பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வது என்று தனது நகைச்சுவையால் படத்தை தோளில் சுமந்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை பூஜாஸ்ரீ, கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். அழகான பெண்ணாக எண்ட்ரி கொடுப்பவர் எதிர்பாரத விதத்தில் அதிரடியான சம்பவங்களை செய்து ரசிகர்களை பதற்றமடைய செய்துவிடுகிறார்.
கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி என்று மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாகவும், திரைக்ககதைக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையிலும் நடித்திருக்கிறார்கள்.
அர்வின் ராஜ் இசையமைப்பில், இயக்குநர் எஸ்.கே.செந்தில் ராஜனின் வரிகளில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருந்தாலும், அனைத்தும் இனிமை ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் விக்னேஷ் மலைச்சாமியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் தரமாகவும், அழகாகவும் இருக்கிறது. ஆனால், வசனக் காட்சிகள் தரமற்றவையாக மிக எளிமையாக இருப்பது படத்திற்கு சற்று குறையாக தெரிகிறது.
படத்தொகுப்பாளர் நாகராஜன்.டி வெவ்வேறு விசயங்களை ஒரே கதையாக சொல்வதில் சற்று தடுமாறியிருப்பதோடு, சம்மந்தம் இல்லாத காட்சிகளை சம்மந்தம் இல்லாத இடத்தில் இணைத்து பார்வையாளர்களை குழப்பமடைய செய்திருக்கிறார். இருந்தாலும், இறுதியில் இயக்குநர் சொல்ல வரும் விசயத்தை பார்வையாளர்களுக்கு புரிய வைக்கும் விதமாக காட்சிகளை கோர்த்து குறைகளை போக்கி விடுகிறார்.
எழுதி இயக்கியிருப்பதோடு, தயாரிக்கவும் செய்திருக்கும் எஸ்.கே.செந்தில் ராஜன், தவறு செய்தவர்களை சட்டம் தண்டிக்கவில்லை என்றாலும், அவர்களின் தவறுக்காக நிச்சயம் தண்டனை கிடைக்கும், என்ற மெசஜை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.
இளம்பெண்களை கடத்தி கற்பழித்து கொடூரமாக கொலை செய்யும் கும்பல், காதலர்களின் படுகொலை என்று படத்தின் ஆரம்பம் மிரட்டினாலும், ராமர் மற்றும் இரண்டு நண்பர்கள் கூட்டணி செய்யும் குற்ற செயல்களை நகைச்சுவையாக சித்தரித்து படம் முழுவதும் சிரிக்க வைக்கும் இயக்குநர் ஸ்.கே.செந்தில் ராஜன், ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
படத்தின் கதாநாயகி மட்டும் இன்றி, ஐட்டம் பாடலில் ஆடும் மூன்று பெண்கள் என படத்தில் இடம்பெறும் அத்தனை பெண்களையும் மெனக்கெட்டு அழகானவர்களாக தேர்வு செய்திருக்கும் இயக்குநர் அந்த மெனக்கெடலை கொஞ்சம் கதை சொல்லல், திரைக்கதை மற்றும் மேக்கிங் ஆகியவற்றிலும் காண்பித்திருந்தால் சுப்பிரமணியபுரம் போன்ற ஒரு தாக்கத்தை இந்த படமும் ஏற்படுத்தியிருக்கும்.
மொத்தத்தில், ‘அது வாங்குனா இது இலவசம்’ குறைகள் இருந்தாலும், நிறைவாக சிரிக்க முடிகிறது. சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்