இளையராஜா இசையில் 1417வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’
இளையராஜா இசையில் 1417வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’
இளையராஜா இசையமைக்கும் 1417வது படத்தை இயக்கும் ஆதிராஜன்
இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1416 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.
இந்தநிலையில் அவரது இசையில் உருவாகும் 1417 படமாக ‘நினைவெல்லாம் நீயடா’ என்கிற படம் உருவாகிறது. இசைஞானியின் இசையில் உருவாகும் இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் மிகப்பெரிய பாக்கியத்தை பெற்றுள்ளார் இயக்குநர் ஆதிராஜன். இவர் சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கியவர்.
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க, மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். இவர்கள் தவிர முக்கிய வேடத்தில் அப்பா படத்தில் நடித்த யுவலஷ்மி நடிக்கிறார். அவருடன் தோழியாக மூக்குத்தி அம்மன் புகழ் அபிநயஸ்ரீ நடிக்கிறார்.. மற்றும் மனோபாலா, காளி வெங்கட், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.
"பியர் பிரேமா காதல்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாச்சார்ஜி இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கையாளுகிறார். படத்தொகுப்பை பிரபாகர் கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை பிரதிப் தினேஷ் அமைக்கிறார். முனிகிருஷ்ணா கலை அமைக்கிறார். பாடல்களை பழநிபாரதி சினேகன் ஆகியோர் எழுதுகின்றனர். நடன கட்சிகளை பிருந்தா, தினேஷ், தீனா அமைக்கின்றனர்.
காதலைக் கொண்டாடிய அழகி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், 96 பட வரிசையில் முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காதலர்களை பற்றிய இளமை துள்ளும் கதையாக இந்தப்படம் உருவாகிறது. குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் உருகாத இதயங்களையும் உருக வைத்துவிடும்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாடல்கள் பாண்டிச்சேரி, கூர்க், இடுக்கி ஆகிய இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது.
 
                        
 
                     
                     
                     
                     
                    


 
 
 
         
         
 
 
                         
                         
                         
                         
                         
         
         
         
         
        