’ஐந்தாம் வேதம்’ இணையத் தொடர் விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’ஐந்தாம் வேதம்’ இணையத் தொடர் விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
ரிக்வேதம், சாமவேதம், யஜுர்வேதம் மற்றும் அதர்வவேதம் ஆகிய நான்கு வேதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐந்தாவது வேதம் ஒன்று இருக்கிறது என்றும், அதன் மூலமாகவே பிரம்மன் மனிதர்களை படைத்தார், என்ற கற்பனையை புராணம் மற்றும் அறிவியலோடு இணைத்து சொல்லியிருக்கும் மர்மம் மற்றும் திரில்லர் இணையத் தொடர் ‘ஐந்தாம் வேதம்’.
தென் தமிழகத்தில் இருக்கும் மிக பழமையான சிவாலயத்தில் ரகசிய இடத்தில் இருக்கும் ஐந்தாவது வேதம் வெளி வரவேண்டிய நாளுக்காக அந்த கோவில் பூசாரி காத்துக் கொண்டிருக்க, அதே வேதத்தின் மூலம் இந்த உலகத்தில் மனிதர்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் அறிவியல் துறையைச் சேர்ந்த சிலர் ஐந்தாவது வேதத்தை தேடுகிறார்கள். மறுபக்கம், மாமிசத்தை கொண்டு 3டி பிரிண்ட் மூலம் அப்படியே அசல் மாமிசத்திலான உருவத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு கூட்டம் ஈடுபடுகிறது. அவர்களும் ஐந்தாம் வேதத்தை கைப்பற்ற முயற்சிக்க, இறுதியில், ஐந்தாம் வேதம் ஒன்று இருப்பது உண்மையா?, அதை தேடுபவர்கள் கண்டுபிடித்தார்களா?, அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், ஆகியவற்றை மர்மம் நிறைந்த காட்சிகளோடும், சுவாரஸ்யமான திரைக்கதையோடும் சொல்வதே ‘ஐந்தாம் வேதம்’.
முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், தேவதர்ஷினி, கிரிஷ் குரூப், ராம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், பொன்வண்ணன், மேத்தீவ் வர்கீஸ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தொடர் முழுவதும் பயணித்து திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன் தேவராஜன், மர்மம் மற்றும் திகில் காட்சிகளை பகல் நேரத்தில் படமாக்கினாலும் அதன் மூலம் பார்வையாளர்களை பதற்றமடைய செய்து விடுகிறார்.
ரேவாவின் பின்னணி இசையில் ஐந்தாம் வேதத்தின் தேடல் காட்சிகள் அனைத்தும் திக்..திக்...நிமிடங்களாக பயணிக்கிறது.
படத்தொகுப்பாளர் ரஜீஷ்.எம்.ஆர், புராணம் மற்றும் அறிவியல் இரண்டோடு ஒன்றை ஒற்றுமைப்படுத்தும் கதையையும், அதைச் சார்ந்து நடக்கும் சம்பவங்களையும் பார்வையாளர்களுக்கு தெளிவாக புரியும்படி காட்சிகளை தொகுத்திருப்பதோடு, ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது, அடுத்த அத்தியாயம் மீது ஆர்வம் ஏற்படும் வகையில் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
கலை இயக்குநர் ஏ.அமரனின் பணி படத்தை தாங்கி பிடித்திருக்கிறது. கோவிலில் காட்சிகளை படமாக்கினாலும் அங்கிருக்கும் பொருட்களை வடிவமைத்த விதம், பாதள அறை, வீடுகளில் இருக்கும் ரகசிய வழி உள்ளிட்ட அனைத்தையும் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்.
ஐந்தாம் வேதம் என்ற ஒன்றை இயக்குநர் நாகா கற்பனையாக உருவாக்கியிருந்தாலும், அதனை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு புராணம் மற்றும் அறிவியல் இரண்டையும் இணைத்து வடிவமைத்த காட்சிகள் அனைத்தும் சஸ்பென்ஸாக பயணிப்பதோடு, லாஜிக்கோடும் பயணித்திருப்பது இத்தொடரின் மிகப்பெரிய பலம்.
ஐந்தாம் வேதம் என்ற புராணக் கதையோடு, தற்போதையக் காலக்கட்டத்தில் மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் ’செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை மிக நுட்பமாக இணைத்து, இப்படியும் நடக்குமா..? என்று நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறார்.
தொடருக்காக மேற்கொண்ட ஆய்வுகள், அதனை திரை மொழியில் சொன்ன விதம் அனைத்தும் நம்மை வியக்க வைத்து ரசிக்க வைப்பதோடு, ஐந்தாவது அத்தியாயத்தில் வேதம் எங்கிருக்கிறது, என்பது தெரிந்து அதை கைப்பற்றுவதற்காக வரும் புதிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் பின்னணி மூலம் பல திருப்பங்களோடு பயணிக்கும் கதையோடு பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் நாகா அவர்களுக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.