கிரிஷ்ணம் : மரணத்தை வென்ற ஒரு மாவீரனின் உண்மைக்கதை!

கிரிஷ்ணம் : மரணத்தை வென்ற ஒரு மாவீரனின் உண்மைக்கதை!

மரணத்தை வென்று ஒரு மாவீரனான ரியல் ஹீரோவின் கதை தான் 'கிரிஷ்ணம் 'என்கிற படமாக உருவாகியிருக்கிறது. சில நேரங்களில் கற்பனைகளை விட நிஜங்கள் கொடுரமாக, குரூரமாக இருக்கும்; கற்பனைக்கெட்டாத மர்மங்கள் கொண்டவையாக இருக்கும்.

அப்படிப்பட்ட கதையைக் கொண்ட ஒரு வாலிபன் தான் அக்ஷய் கிருஷ்ணன். திரிச்சூரைச் சேர்ந்த பள்ளி மாணவன். அவன்படிப்பில் மட்டுமல்ல நடனம் ,நாடகம், மேடைப் பேச்சு , விவாதம், விளையாட்டு என்று சகல துறைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தான். 

கலந்து கொள்ளும் போட்டிகளில் எல்லாம் பரிசுகளும் பாராட்டுகளும் அள்ளி வருவான். நல்ல உயரம், பளிச்சென்று நிறம், உற்சாகம் பொங்கும் உடல்வாகு, கனவு ஒளிவிடும் கண்கள், பார்ப்பவரை நேசம் கொள்ள வைக்கும் பரந்த மனம் என்று குறையொன்றும் இல்லாத நிறைகள் வழியும் மாணவன். எனவே அவனது நட்பு வட்டம் பரந்தது. நாளுக்கு நாள் நண்பர்கள் பெருகினர். அவனது வாழ்க்கையில் ஏக்கம், வருத்தம், துன்பம், கவலை என்பனவற்றை அறியாதிருந்தான். அவனை ஓர் உதாரண மாணவன் என்றே கூறலாம். 

குடும்பத்தின் வசதியான பின்புலம் அவனுக்கு உற்சாகத்தை ஊற்றிக் கொண்டும் கனவுகளுக்குப் பாதை அமைத்துக் கொண்டும் இருந்தது. எனவே பள்ளிப் படிப்பு முடிந்ததும் மேல் படிப்புக்கு வெளிநாடு செல்ல விமானம் ஏறுவது என்பது அவனுக்குப் படிக்கட்டின் அடுத்தபடியேறுவது என்பது போல் அத்தனை சுலபமாக இருந்தது.

நடனப் போட்டி ஒன்றுக்காக ஒரு நாள் முன் தயாரிப்புப் பயிற்சியில் இருந்தான். கால் பிசகி விழுந்ததில் சிறு காயம் ஏற்பட்டது. மருத்துவமனை போன போது சோதிக்கப்பட்டது .

அதற்கு மேல் நடந்ததை அக்ஷய் கிருஷ்ணனிடேமே கேட்போம். 

"மருத்துவமனையில் முதலில் ஹெர்னியா பிரச்சினை என்றார்கள். நான் நம்பவில்லை. ஒரு சிறு ஆபரேஷனில் சரி செய்து விடலாம் என்றார்கள் .இன்னொரு சோதனை செய்தபோது வயிற்றில் மட்டுமல்ல உடலில் முழுதும் நீர்ச்சத்து அளவுக்கதிகமாக சேர்ந்து நிரம்பியுள்ளது என்றார்கள் .எனக்கு இதுவும் புரியவில்லை. நம்பவும் தோன்றவில்லை .ஏனென்றால் என் உடம்பில் பெரிய வலியோ இயங்குவதில் எந்த அசெளகரியமும் கூட நான் உணரவில்லை. விட்டால் ஓடுவேன் போலிருந்தது. அதற்கு முன்பு வரை அப்படி இருந்தவன் தானே ? என் நிலைமை உள்ளூர் டாக்டர்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அப்பா பதற்றமாக இருந்தார். ஒரு டெஸ்ட் எடுத்தார்கள். அப்பா முகம் இறுக்கமாக இருந்தது. அவர் இதை லேசில் விடவில்லை. வெளிநாட்டிலிருந்து மருத்துவக் குழு வந்தது. முதலில் அமெரிக்கா பின்பு லண்டன்.

அவர்கள் டெஸ்ட் எடுத்தார்கள் .ஒன்றும் புரிபடவில்லை.ஒரு டெஸ்ட்டுக்கு 8 லட்சம் செலவு. இப்படி டெஸ்ட் மேல் டெஸ்ட் எடுத்தார்கள். 

ஒவ்வொரு உறுப்பாகப் பாதிக்கப் பட்டு வருவதாகச் சொன்னார்கள். என்ன பிரச்சினை என்றால் வாயில் நுழையாத பெயரெல்லாம் Chronic Constrictive Pericarditis சொன்னார்கள். காரணம் தெரியவில்லை.இந்த இக்கட்டான நேரத்தில் திரிச்சூர் டாக்டர் ஒரு யோசனை சொன்னார். அது இதயத்துக்கும் பிற உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியது.ஒரு கட்டத்தில் கொச்சியில் அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆஸ்பிட்டலில் ஆபரேஷன் செய்ய முடிவானது. என் நிலையைப் பார்த்த ஒரு டாக்டர் மயங்கி விழுந்தார். எனக்கும் கண் இருண்டது."
சற்றே நிறுத்தினார் அக்ஷய் கிருஷ்ணன்.

இதற்கிடையில் என்ன நடந்தது?

வெளிநாட்டு டாக்டர்களையே திணற வைத்த உள்ளுறுப்புகள் செயல் இழப்பு, பத்து லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் இதயக் கோளாறு எல்லாம் எப்படிச் சரியானது, ? 

மருத்துவத்துக்கே எட்டாத அதிசயம் ஒன்று நடந்தது. அதனால் தான் பழைய அக்ஷய் கிருஷ்ணனாகேவே மீண்டு வந்திருக்கிறார். அவரது கனவுப்படி மேல் படிப்புக்கு வெளிநாடு செல்லவிருக்கிறார்.

இடையில் நடந்த அதிசயம் என்ன.?

" என் அப்பா ஒரு குருவாயூர் கிருஷ்ணன் பக்தர். அவர் மாதம் தவறாமல் முதல் தேதியன்று குருவாயூர் செல்வார். இப்படி 40 ஆண்டுகளாகப் போய் தரிசித்து வருபவர். வெளிநாடு சென்று இருந்தாலும் கூட மாதத்தின்முதல் தேதியன்று குருவாயூர் வந்து விடுவார். இப்படி அமெரிக்கா ,ரஷ்யாவில் இருந்த போது கூட விமானம் மூலம் வந்து போயிருக்கிறார். அப்படிப் பட்ட அப்பாவின் குருவாயூரப்பன் நம்பிக்கை தான் என்னைக் காப்பாற்றியுள்ளது. இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? எனக்கு இவ்வளவும் ஆனதை கடைசிவரை என் அம்மாவிடம் அப்பா கூறவே இல்லை. இது தெரிந்த பிறகு அம்மா எனக்கு நிழல்போல் ஆகிவிட்டார்." என்கிறார்.

தன் மகன் குருவாயூர் கடவுளின் அருளால் உயிர் பிழைத்த அற்புத அனுபவத்தை ஒரு படமாக எடுத்து உலகிற்குக் காட்ட வே அதை 'கிரிஷ்ணம்' என்கிற படமாக எடுத்துள்ளார் தயாரிப்பாளர் பி.என்.பலராம்.. தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் ,இந்தி மொழிகளில் தயாரித்துள்ளார்.தன் மகனையே நாயகனாக நடிக்க வைத்துள்ளார். ஐஸ்வர்யா உல்லாஸ் நாயகியாக நடித்துள்ளார்.அம்மாவாக சாந்திகிருஷ்ணாவும் அப்பாவாக சாய்குமாரும்  நடித்துள்ளனர். தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

"இதில் 90 சதவிகிதம் உண்மையும் 10 சதவிகிதம் சினிமாவுக்கான புனைவும் இருக்கும். இதில் இயல்பாகேவே ஒரு முழு நீள வணிக சினிமாவுக்கான நட்பு ,காதல் ,பாசம் ,அன்பு ,பக்தி ,விசுவாசம் , நம்பிக்கை ,விறுவிறுப்பு என அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. " என்கிறார் இயக்குநர் தினேஷ் பாபு.

'கிரிஷ்ணம்' மார்ச் -ல் திரைக்கு வருகிறது.