உதிரிப்பூக்களை படைத்தவருக்கு எம் இதயப்பூக்களின் கண்ணீர்ப் பூக்கள் !

உதிரிப்பூக்களை படைத்தவருக்கு எம் இதயப்பூக்களின் கண்ணீர்ப் பூக்கள் !

வாழ்க்கையில் இருந்து இயல்பான சினிமாவாக உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்களை மக்களுக்காக படைத்தவர் இயக்குனர்-நடிகர் மகேந்திரன் ஐயா அவர்கள்! 

வணிகம் பெருக்கும் நோக்கோடு மலைபோல் வளர்ந்து நிற்கும் தமிழ் சினிமாவில் இருந்து, வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த திரைப்படங்களை உருவாக்கியவர்.

இவருடைய படைப்புகளில் உயிர்நாடியாக இருக்கும் எளிமையான கதை மாந்தர்களின் வெளிப்பாடும் அவர்களின் அடையாளங்களும் தான், நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் போட்டிக்குத் தெரிவாகும் படங்களுக்கான விதிமுறைகளில் ஒன்றாக வைத்திருக்கின்றோம். பெரும்பாலான திரைப்படங்கள் யதார்த்தமான கதைகள் உள்ள திரைப்படங்களை தெரிவுசெய்து மதிப்பளித்து வருகின்றோம்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் வெளியாகும் 150-200 திரைப்படங்களில் 15இல் இருந்து 20 வரையான திரைப்படங்களை தெரிவு செய்து தமிழர் விருது கொடுத்து வருகின்றோம். அந்த வகையில் இவருடைய திரைப்படங்களே எமக்கு முதன்மை விதிமுறைகளுக்கான அடிப்படையாகவும் அமைந்திருக்கின்றது. 

10வது நோர்வே தமிழ் திரைப்படவிழாவில் - வாழ்நாள் சாதனையாளர் "தமிழர் விருது" இயக்குனர், நடிகர் மகேந்திரன் அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தோம். 
அவரை இங்கு அழைத்து அந்த விருதினை வழங்குவதற்கு அவரை அணுகியபோது வரமுடியாத சூழ்நிலை உள்ளதாக தகவல் கிடைத்தது. 

இன்று அதிகாலை முகநூலில் அவருடைய நிழற்படங்கள் துயரமான செய்தியை பார்த்து மிகவும் வேதனை அடைகின்றோம். ஐயாவின் ஆத்மா அமைதி தேடி திரைவானில் என்றும் வலம் வரும். 

உதிரிப்பூக்களை கொடுத்தவருக்கு எங்கள் இதயங்களில் இருந்து கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாகுகின்றோம்.

வசீகரன் சிவலிங்கம் 
இயக்குனர் 
நோர்வே தமிழ் திரைப்பட விழா