நடிகர் ராஜேஷ் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

இரங்கல் செய்தி
திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் எண்ணற்ற கதாபாத்திரங்களின் மூலம் மக்களை நெகிழ வைத்து சிந்திக்க வைத்து சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற ஆகச்சிறந்த நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினருமான திரு.ராஜேஷ் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தியது அறிந்து அளப்பரிய அதிர்ச்சிக்கும், சொல்லொண்ணா ஆழ்ந்த துயரத்திற்கும் ஆளாகியுள்ளோம். அவரது அகால மறைவு எக்காலத்திலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். தமிழில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், சமூக வலைத்தளங்களில் தனது சமுதாய விழிப்புணர்வு பேட்டிகள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தகவல் பகிர்வுகளாலும் எண்ணற்றவர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலும் வழங்கியது அவரது தன்னலம் கருதா சமுதாயப் பொதுநோக்கு பார்வைக்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவரது மறைவு திரையுலகிற்கும், குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் ஒரு நிரந்தர இழப்பாகும். அவரது மறைவால் இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது புகழ் நீடூழி நிலைத்திருக்க வேண்டுகிறோம்..
# தென்னிந்திய நடிகர் சங்கம்