’மகாசேனா’ பட விமர்சனம்
’மகாசேனா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
பழங்குடியினரான நாயகன் விமல் சேனா என்ற யானையை வளர்க்கிறார். அவரது மலை கிராமத்து கோவிலில் இருக்கும் யாளிஷ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி ஜான் விஜய், மலை அடிவாரத்தில் வாழும் மற்றொரு பழங்குடியின மக்களை வைத்து திருட திட்டமிடுகிறார். இதற்கிடையே மதம் பிடித்த விமலின் யானை அவரது மகளை தாக்கிவிட்டு காட்டுக்குள் சென்று விடுகிறது. யானையை தேடி காட்டுக்குள் செல்லும் விமல், கோவில் சிலை கடத்தல் திட்டத்தை முறியடித்தாரா ? , காட்டுக்குள் சென்ற யானை என்னவானது ? என்பது தான் படத்தின் கதை.
ஹீரோயிசம் இல்லாத ஹீரோவாக நடித்திருக்கும் விமல், பழங்குடியினராக நடித்தாலும், எந்தவித அலட்டல் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை சாதாரணமாக கையாண்டிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, பழங்குடியின பெண்ணாகவும், வீரம் மிக்கவராகவும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
யோகி பாபு வரும் காட்சிகளில் சில மட்டுமே சிரிக்க வைக்கிறது.
வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், வில்லனாக நடித்திருக்கும் கபிர் துஹான் சிங், கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சுபாங்கி ஜா, விமலின் மகளாக நடித்திருக்கும் சிறுமி இலக்கியா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர், காட்சிகளை படமாக்கிய விதம் படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, படத்திற்காக செய்யப்பட்ட செலவுகளை திரையில் காட்டியிருக்கிறது.
இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். உதய் பிரகாஷ் U P R-ன் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், இயக்குநர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார்.
இயற்கையை நேசிக்க வேண்டும், வனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கதை எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன், முழுக்க முழுக்க கமர்ஷியலாக படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார்.
யானை வைத்து படமாக்கிய விதம், காடுகளை காட்சிப்படுத்திய விதம் ஆகியவை ரசிக்க வைத்தாலும், தான் சொல்ல வந்த கருத்தை இயக்குநர் வலிமையாக சொல்ல தவறியிருக்கிறார். அதே சமயம், மூன்று விதமான கதைகளை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பலவித அம்சங்களை ஒரே படத்தில் சொல்லி ரசிகர்களின் கவனம் ஈர்க்க முயற்சித்திருக்கிறார்.
இயக்குநர் தினேஷ் கலைச்செல்வனின் முயற்சிக்கு சென்னை பத்திரிகா சார்பில் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.




