காந்தி டாக்ஸ்’ பட விமர்சனம் விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

காந்தி டாக்ஸ்’ பட விமர்சனம் விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

மும்பை குடிசைப் பகுதியில் வாழும் விஜய் சேதுபதி, வேலை இல்லாததால் ஒருவேளை உணவுக்கு கஷ்ட்டப்படுகிறார். மறுபக்கம் பெரும் பணக்காரரான அரவிந்த் சாமி, தொழிலில் நஷ்ட்டம் ஏற்பட்டு தனது சொத்துக்களை இழக்கிறார். இருவரது இத்தகைய நிலைக்கு காரணம் மற்றவர்கள் வாங்கிய லஞ்சங்கள். தங்களது நிலையில் இருந்து மீள்வதற்காக இருவரும் மேற்கொள்ளும் முயற்சியின் போது, ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது?, என்பதை மனிதர்களை விட அவர்களிடம் இருக்கும் பணம் தான் பேசும், என்ற உண்மையை பேசுவது தான் ‘காந்தி டாக்ஸ்’.

 

பணம் பத்தும் செய்யும், என்று சொல்வது போல், நம் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு பணம் மட்டும் தான், அந்த பணம், எங்கு, எப்படி எல்லாம் பேசுகிறது, என்பதை படம் விவரிப்பதோடு, பணம் மட்டுமே போதுமா ? என்ற கேள்வியையும் பார்வையாளர்களிடத்தில் எழுப்பி, அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறது.

 

முகபாவனைகள் மற்றும் உடல் அசைவுகள் மூலம் வறுமையின் கொடுமைகளையும், தன் இயலாமையையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் விஜய் சேதுபதி, வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்து பார்வையாளர்களிடம் எளிதில் கடத்தி விடுகிறார்.

 

மிகப்பெரும் பணக்காரராக இருந்தாலும், அனைத்தையும் இழந்து பிரச்சனையில் சிக்கி போராடும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அரவிந்த்சாமியும், கண்கள் மூலமாக பேசி கவனம் ஈர்க்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அதிதி ராவ், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

 

நகைச்சுவையாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், மூன்று கதாபாத்திரங்களைப் போல் முக்கியத்துவம் உள்ள வேடமாக பயணித்திருக்கும் சித்தார்த் ஜாதவ், தன் உடல் அசைவுகள் மூலமாக சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார்.

 

கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவில் ஏழைகளும், பணக்காரர்களும் யார் ? என்பதை அப்பட்டமாக காட்டும் நகரமாக மும்பை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆடம்பர வாழ்க்கையை வெளிக்காட்டும் அரவிந்த் சாமியின் வீட்டையும், ஏழ்மையை பிரதிபலிக்கும் விஜய் சேதுபதியின் வீட்டையும் காட்சிப்படுத்திய விதம் கவனம் ஈர்க்கிறது.

 

படத்தில் வசனம் இல்லை என்றாலும், தன் இசையை பேச வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற வகையிலான பின்னணி இசை, படத்தின் காட்சிகளைப் போல் பார்வையாளர்களின் மனதிலும் பல வகையான மாற்றங்களை உண்டாக்குகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கும் பாடல்களின் வரிகள் கவரவில்லை என்றாலும், அதில் உள்ள இசை கவனம் ஈர்க்கிறது.

 

படத்தொகுப்பாளர் ஆசிஸ் மாத்ரே மற்றும் கலை இயக்குநர் துர்கபிரசாத் மஹாபத்ரா ஆகியோரது பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர், வசனம் இல்லாமல் படத்தை இயக்கியிருந்தாலும், பணத்தின் பலத்தை ரூபாய் நோட்டுகளில் இருக்கும் காந்தியின் சிரிப்பு மூலம் பேசியிருப்பவர், ”மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு” என்ற காந்தியின் வாசகம் மூலம் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை, என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.

 

படத்தில் வசனம் இல்லை என்றாலும், இயக்குநரின் துள்ளியமான காட்சி வடிவமைப்பு மற்றும் நடிகர்களின் நுணுக்கமான முகபாவனைகள் மற்றும் உடல் அசைவுகள் மூலம் படம் அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்புடன் பயணிக்கிறது.

 

அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் நீதித்துறையில் நிறைந்திருக்கும் லஞ்சங்கள் என்று தைரியமான காட்சிகளை வடிவமைத்து, படத்தை நேர்மையாக இயக்கியிருக்கும்இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர் உள்ளிட்ட ‘காந்தி டாக்ஸ்’ படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.