’7ஜி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’7ஜி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’7ஜி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’7ஜி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை சொந்தமாக வாங்கும் ஸ்மிருதி வெங்கட், தனது கணவர் மற்றும் மகனுடன் அதில் குடியேறுகிறார். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு நினைவானதால் மகிழ்ச்சியாக இருக்கும் அவர் சில நாட்களில், அமானுஷ்ய சம்பவங்களால் பாதிக்கப்படுகிறார். இதற்கிடையே, ஸ்மிருதி வெங்கட்டின் கணவரை ஒருதலையாக காதலிக்கும் அவரது அலுவலக தோழி, அவரை கவர்வதற்காக சூனியம் செய்த பொம்மை ஒன்றை ஸ்மிருதி வீட்டில் வைக்கிறார். அந்த மந்திர பொம்மையால் ஸ்மிருதி வெங்கட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று எதிர்பார்க்கும் நிலையில், வேறு ஒரு ஆத்மா மூலம் ஸ்மிருதி வெங்கட்டுக்கு பிரச்சனைகள் வருகிறது. அந்த ஆத்மா யார்? அது ஏன் அந்த வீட்டில் இருக்கிறது? என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் படத்தின் கதை.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட் பயம், கோபம், தைரியம், காதல் என அனைத்து உணர்வுகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், கனமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

ஸ்மிருதியின் கணவராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர், வில்லனாக நடித்திருகும் சித்தார்த் விபின், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அவர் அவர் வேலையை சரியாக செய்து திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கண்ணாவின் கேமரா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் அதிகப்படியாக வலம் வந்தாலும், திகில் காட்சிகளில் பார்வையாளர்களை திக்...திக்... அடைய செய்கிறது.

சித்தார்த் விபினின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

எழுதி இயக்கியிருப்பதோடு தயாரித்தும் இருக்கும் ஹாரூண், வழக்கமான திகில் கதையை வழக்கமான முறையில் சொல்லி ரசிகர்களை அச்சுறுத்த முயற்சித்திருக்கிறார்.

ஒரே கதை, பழைய காட்சி அமைப்புகள் என்று நாம் ஏற்கனவே பார்த்த படங்களின் சாயல் அதிகமாக இருந்தாலும், பிளாக் மேஜிக் என்ற அம்சத்தின் மூலம் திரைக்கதைக்கு கூடுதல் சுவாரஸ்யம் கொடுத்திருக்கிறார்.

குறைகள் சில இருந்தாலும், அதை பார்வையாளர்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு காட்சிகளை பரபரப்பாக நகர்த்தி சென்று, முழு படத்தையும் பயத்துடன் பார்க்க வைத்திருக்கும் இயக்குநர் ஹாருணுக்கு சென்னை பத்திரிகா சார்பில் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.