புத்தாண்டு புதுவரவாக கலர்ஸ் தமிழில் ’உயிரே’நெடுந்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது

 புத்தாண்டு புதுவரவாக கலர்ஸ் தமிழில் ’உயிரே’நெடுந்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது

தன் தாயின் அரசியல் ஆசையால் தன் காதலனைப் பறிகொடுத்துவிட்டு சந்தர்ப்பவசத்தால் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் தன் வாழ்வில் நடக்கும் போராட்டங்களை எப்படி கடந்துவருகிறாள் என்பதே கதை.

அரசியல் வேட்கையால் நேரெதிர் துருவத்தில் நிற்கும் தாய், தாய்ச் சொல்லைத் தட்டாத மூன்று சகோதரர்கள், இவர்களுக்கு நடுவில் தற்போது உயிரோடு இல்லாத தன் தந்தையின் சொல்லே வேதவாக்கு என நினைத்து நேர்மையான வழியில் போராடத் துடிக்கும் இளம்பெண்ணாக வலம் வருகிறாள் பவித்ரா.

சிவில் சர்வீஸ் தேர்வெழுதிவிட்டு நேர்முகத் தேர்வுக்காக காத்திருக்கும் இளைஞன் வருணை பவித்ரா காதலிக்க,தன் தகுதிக்கு குறைச்சல் என கருதி வருணை கொன்றுவிட்டு வேளாண்துறை அமைச்சராகவும் மனைவியை இழந்துவிட்டு 5 வயது குழந்தைக்குத் தகப்பனாகவும்  இருக்கும் செழியனுடன் பவித்ராவை கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார் பவித்ராவின் தாய் வீரலட்சுமி.

தனக்கெதிராக தன் தாய் செய்த துரோகம், தன் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்கொண்டு நேர்மையான வழியில் போராடுகிறாள் பவித்ரா. மதுரையைக் கதைக்களமாக கொண்ட இக்கதை குடும்ப உறவுகளையும், சமூகப் பிரச்சனைகளையும் ஒரு பெண் துணிச்சலாகக் கையாள்வதைக் குறித்துப் பேசுகிறது.

வித்தியாசமான கதைக்களங்களால் தங்கள் சீரியல்களில் புதுமை படைக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் இந்த புதிய தொடர் குடும்பம் சமூகம் என இருவேறு களங்களிலும் ஒரு பெண் நடத்தும் போராட்டத்தை வித்தியாசமான வகையில் வெளிப்படுத்துகிறது.

இதற்கு முன்பாக கலர்ஸ் ஹிந்தியில் வெளிவந்த ஹிட் தொடரான ‘சோட்டி ஸர்தார்னி’ யின் ரீமேக் வடிவமாகவே தற்போது தமிழில் வெளிவருகிறது இந்த ‘உயிரே’ தொடர்.

தொடரின் நாயகியான பவித்ராவாக மனிஷா ஜித்தும் , நாயகன் செழியனாக வீரேந்திர சௌத்ரியும், பவித்ராவின் தாய் வீரலட்சுமியாக சோனா நாயரும் நடிக்கிறார்கள்.

தொடர்  குறித்து, கலர்ஸ் தமிழின்  வர்த்தகத் தலைவரான அனுப் சந்திரசேகரன் கூறுகையில்,

``எங்கள் சேனலில் எப்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சிகளையே வழங்கி வருகிறோம்.எங்கள்  சீரியல்களிலும் பெண்கள் துணிச்சலாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்வதாகவே கதையை வடிவமைத்திருக்கிறோம். அதன்படி ‘உயிரே’ தொடர் துணிச்சலான ஒரு பெண்ணின் கதையை உங்கள் முன் கொண்டு வருகிறது. இது பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைக் கொடுக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இத்தொடரில் செழியனாக நடிக்கும் வீரேந்திர சௌத்ரி கூறுகையில், ``தொலைக்காட்சியில் முதல் முறையாக நான் அறிமுகமாகிறேன். இது பெண்களைப் பற்றிய ஒரு சக்திவாய்ந்த தொடர். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பெண்களை இன்னும் அதிகமாக நேசிக்கத் தோன்றுகிறது. இந்த தொடரில் நடிப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

இதேபோல் பவித்ரா கதாபாத்திரத்தில் நடிக்கும் மனிஷா ஜித் கூறுகையில், `` எனக்குக் கொடுக்கப்பட்ட இந்த புதிய கதாபாத்திரத்தில் பார்வையாளர்கள் என்னை மிகவும் நேசிப்பார்கள். பெண் என்றாலே கம்பீரம் தானே… அதை இந்த தொடரில் நான் நிரூபிப்பேன் என நம்புகிறேன்’’ என்றார்.

பவித்ரா தனக்கெதிரான சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதை அறிந்து கொள்ள இத்தொடரை வரும் ஜனவரி 2ம் தேதியிலிருந்து திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.