கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசும் இந்த குறும்படம் சமுதாயத்தில் மாற்றத்தை வலியுறுத்தும்
தமிழில் 'தங்க முட்டை' மற்றும் தெலுங்கில் 'பங்காரு குட்டு' என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி, ஒரு முக்கிய கருத்தை வலியுறுத்தும் சுவாரசியமான குறும்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அரசியலமைப்பின் முக்கியமான தூண்களில் ஒன்றில் மாற்றத்தை பரிந்துரைக்கிறது.
‘தங்க முட்டை’ படத்தில் நாயகனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் சம்பூர்ணேஷ் பாபுவுக்கு தமிழில் டப்பிங் பேசும் பிரபல நடிகர் சஞ்சீவ் அரசு அதிகாரியாக இந்த குறும்படத்தில் நடிக்கிறார். நடிகை நளினி, பாப்பி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உருவாகும் இந்த குறும்படத்திற்காக 'தங்க முட்டை' படக்குழுவினருடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தி. பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் படத்தொகுப்பையும், பிவி பாலாஜி கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
முக்கியமான கருத்தை மக்களிடம் தாமதமின்றி கொண்டு சேர்க்க வேண்டும் என்று கோபிநாத் நாராயணமூர்த்தி கருதுவதால், இக்குறும்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மை கிண்டா பிலிம்ஸ் இந்த குறும்படத்தை தயாரிப்பதோடு, இன்னும் சில திரைப்படங்களையும் தயாரிக்கவுள்ளது.
ஒரு பெண் குழந்தையின் வழியாக சொல்லப்படவுள்ள இந்த கதை, இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று கூறிய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஏபிஜே அப்துல் கலாமின் லட்சியத்தையும் நமக்கு நினைவூட்டும்.
பன்னாட்டு நிறுவனங்களுடன் பணியாற்றிய அனுபவம் பெற்ற தகவல் தொழில்நுட்ப நிபுணரான கோபிநாத் நாராயணமூர்த்தி சினிமா மீதான பற்றால் இயக்குநர் ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் திரைக்கதை மற்றும் திரைப்பட இயக்க பயிற்சி மையத்தில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன் மற்றும் பிஜோய் நம்பியார் ஆகியோரிடமும் இவர் பணியாற்றியுள்ளார். பின்னர் இவர் ஒரு திரை எழுத்து நிறுவனத்தை தொடங்கியபோது, இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக இயக்குநராக உருவெடுத்துள்ளார்.