‘ஃபயர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘ஃபயர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
நாயகன் பாலாஜி முருகதாஸ் காணவில்லை, என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளிக்கிறார்கள். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளும் போலீஸுக்கு பிசியோதெரப்பிஸ்ட்டான பாலாஜி முருகதாஸ், பல பெண்களை தனது காதல் மற்றும் காம வலையில் வீழ்த்தி, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததோடு, அவர்களை வேறு சில விசயங்களுக்காகவும் பயன்படுத்தியது தெரிய வருகிறது. இதையடுத்து காணாமல் போன பாலாஜியை தேடும் பணியை காவல்துறை தீவிரப்படுத்த, அவர் பற்றிய பால அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அதே சமயம், காணாமல் போன அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியாமல் அவரை தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கும் போலீஸ், அவரை கண்டுபிடித்ததா?, பெண்களை அவர் தனது காதல் வலையில் வீழ்த்தியது எப்படி? போன்ற கேள்விகளுக்கான விடையை கிளுகிளுப்பாக சொல்வதே ‘ஃபயர்’.
காசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் பாலாஜி முருகதாஸ், உண்மை சம்பவத்தின் நாயகன் நாகர்கோவில் காசியை தனது உருவத்தின் மூலம் நினைவுப்படுத்துவதோடு, தவறான கதாபாத்திரத்தை மிக சரியாக செய்து நடிகராக நியாயம் சேர்த்திருக்கிறார்.
சின்னத்திரையில் குடும்ப குத்துவிளக்காக இருந்த ரச்சிதா மகாலட்சுமி, கவர்ச்சி தீயில் ரசிகர்களை கிரங்கடிக்கச் செய்கிறார். மழையில் நனைந்தபடி தனது உடல் அழகை வெளிப்படுத்துவது, ஈரமான உடலில் வெள்ளை சட்டை அணிந்து கவர்ச்சியாக காட்சியளிப்பது என்று காம களியாட்டத்தை ஜோராக நடத்தியிருக்கிறார்.
சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷான் என மற்ற மூன்று நாயகிகளும், ரச்சிதாவுக்கு சளைத்தவர்கள் இல்லை, என்பதை நிரூபிக்கும் வகையில் படுக்கையறை காட்சிகளில் எந்தவித பதற்றமும் இன்றி நடித்து பார்வையாளர்களை பரவசமடைய செய்கிறார்கள்.
படத்தை இயக்கி தயாரித்திருக்கும் ஜே.எஸ்.கே, சரவணன் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்ற படங்களில் இவர் நடிக்கும் போது, அவரது கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் பாராட்டும்படி இருக்கும். ஆனால், அவரது சொந்த படத்தில் நடிக்கும் போது மட்டும் ஏன் இப்படி சொதப்பினார், என்று தான் தெரியவில்லை. காணாமல் போன வழக்கை விசாரிக்க தொடங்கி பிறகு அது பாலியல் வன்கொடுமை வழக்காக மாறும்போது விசாரணை சூடுபிடித்தாலும், ஜே.எஸ்.கே-வின் நடிப்பு மட்டும் சூடு பிடிக்காமல் சொதப்பலாக பயணித்து பார்வையாளர்களை சோதிக்கிறது.
சிங்கம் புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்கரவர்த்தி, அனு விக்னேஷ், பேபி மனோஜ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருந்தாலும், அவர்களது நடிப்பு கொஞ்சம் ஓவர் டோசாகவே இருக்கிறது.
இசையமைப்பாளர் டீகே-வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி-யின் கேமரா படுக்கையறை காட்சிகளை பார்வையாளர்களை சூடேற்றும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார், படத்தின் கிளுகிளுப்பான காட்சிகளை பார்த்து கிரங்கி போயிருப்பார் போலிருக்கு, அதனால் தான் படம் முழுவதும் மெதுவாக நகரும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பெண்கள் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், என்பதை கதை பேசினாலும், எஸ்.கே.ஜீவாவின் வசனங்கள் எதையுமே அழுத்தமாக பேசவில்லை.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு ஜே.எஸ்.கே எழுதி இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தின் பின்னணியோ அல்லது இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கான வழியையோ சொல்லவில்லை. மாறாக உண்மை கருவை வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க காம வடிவிலான திரைக்கதை மூலம் ரசிகர்களை குஷிப்படுத்த இயக்குநர் ஜே.எஸ்.கே முயற்சித்திருக்கிறார்.
முதல் பாதியில் மாயமான பிஸியோதெரப்பிஸ்ட், அவரை தேடும் முயற்சியில் கண்டுபிடிக்கப்படும் பாலியல் குற்றங்கள் என்று விறுவிறுப்பு அம்சங்கள் இருந்தாலும், அவற்றை சரியான முறையில் கையாளாமல் படத்தை மெதுவாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் ஜே.எஸ்.கே, இரண்டாம் பாதியில் நாயகன் நான்கு நாயகிகளையும் சக்கையாக பிழிந்தெடுத்த ஜூஸ் மூலம் பார்வையாளர்களை குளிர்வித்து, மகிழ்வித்திருக்கிறார். சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.