’மாரீசன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’மாரீசன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
திருடனான பகத் பாசிலும், வயதான நபரான வடிவேலும் ஒன்றாக பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வடிவேலுவிடம் பணம் இருப்பதை தெரிந்துக் கொள்ளும் பகத் பாசில், அவரிடம் இருக்கும் பணத்தை பறிப்பதற்காக அவருடன் தொடர்ந்து பயணிக்கிறார். ஆனால், பகத் பாசிலுடன் பயணித்தாலும், அவருக்கே தெரியாமல், அவரது அடையாளங்களைப் பயன்படுத்தி சிலரை தேடிப் பிடித்து வடிவேலு கொலை செய்கிறார். வடிவேலு யார்?, அவர் செய்யும் கொலைகளுக்கும், பகத் பாசிலுக்கும் என்ன தொடர்பு ? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரது எதார்த்தமான நடிப்பு மற்றும் நகைச்சுவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது. ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வடிவேலுவும், நல்லவன் போல் நடித்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடும் பகத் பாசிலும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வதும், ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் திட்டம் போடுவது என்று படம் முழுவதையும் தோளில் சுமந்திருக்கிறார்கள்.
அப்பாவியான முகம், கண்களில் பழி தீர்க்கும் வெறி, நிதானமான செயல் என தனது ஒவ்வொரு அசைவுகளிலும் வேலாயுதம் பிள்ளை என்ற கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கும் வடிவேலு, செண்டிமெண்ட் காட்சிகளில் அளவாக நடித்து அசத்தியிருக்கிறார்.
திறமையான திருடனாக, துறுதுறு நடிப்போடு வலம் வரும் பகத் பாசில், வடிவேலுக்கு துணையாக பயணித்திருக்கிறார். படம் முழுவதும் வடிவேலு ஸ்கோர் செய்ய, இறுதிக்காட்சியில் பகத் பாசிலுக்கும் சிறிது வாய்ப்பளித்து அவரையும் முதன்மைப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள்.
கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேனுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அளவாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சொல்லும்படியாக இல்லை என்றாலும், இளையராஜாவின் சில பாடல்கள் சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னணி இசை கதையில் இருக்கும் உணர்வுகளுக்கும், மர்ம திருப்பங்களுக்கும் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி, இருவரது பயணத்தை எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, இருவருக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான தொடர்பையும், அவர்களது இயல்பான நடிப்பையும் சிந்தாமல் சிதறாமல் காட்சிப்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
உணர்வுப்பூர்வமாக தொடங்கும் கதை திடீரென்று கிரைம் சஸ்பென்ஸ் ஜானராக உருவெடுத்தாலும், படம் முழுவதும் உணர்வுப்பூர்வமான படைப்பாக பயணிக்கும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படைப்பு இயக்குநராக பணியாற்றியிருக்கும் வி.கிருஷ்ணமூர்த்தி, இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு பயணம் மற்றும் அந்த பயணத்தின் நடுவே சில மர்மங்கள் என்ற ரீதியில் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
வடிவேலுவை ஏமாற்ற முயற்சிக்கும் பகத் பாசில், பகத் பாசிலை ஏமாற்றிவிட்டு கொலை செய்யும் வடிவேலு, என முதல் மற்றும் இரண்டாம் பாதியில் எதிர்பார்க்காத சில திருப்பங்களை வைத்திருக்கும் இயக்குநர் சுதீஷ் சங்கர், பல திரைப்படங்களில் பேசிய, பேச வேண்டிய சமூக பிரச்சனையை வேறு பாணியில் பேசியிருப்பதோடு, அதை திரை மொழியில் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
முதல் பாதி படம் எதிர்பார்ப்புகளுடனும், சுவாரஸ்யாமகவும் நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் வடிவேலுக்கு முக்கியத்துவம் இருப்பது போல் பகத் பாசிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முயற்சித்திருப்பது படத்தை சற்று தொய்வடைய செய்துவிடுகிறது. அந்த குறையை தவிர்த்துவிட்டு பார்த்தால், நிச்சயம் பார்க்க வேண்டிய படம் தான்.
‘மாரீசன்’ படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.