'தூக்குதுரை' விமர்சனம்

'தூக்குதுரை' விமர்சனம்
'தூக்குதுரை' விமர்சனம்

'தூக்குதுரை' விமர்சனம்

பல கோடி மதிப்புள்ள மன்னர் காலத்து கிரீடம் ஒன்றை ராஜ குடும்பம் தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வருகிறது. அந்த கிரீடம் பற்றி தெரிந்துக் கொள்ளும் திருடர்கள் பாலசரவணன், மகேஷ், சென்ராயன் ஆகியோர் திருடுவதற்கு திட்டம் போடுகிறார்கள். அதன்படி தற்போதைய காலக்கட்டத்து அரச குடும்ப வாரிசான மாரிமுத்துவிடம் இருந்து கிரீடத்தை திருட முயற்சிக்கும் போது, அது போலியான கிரீடம் என்ற உண்மை தெரிய வருவதோடு, தற்போது அந்த கிரீடம் அந்த ஊரில் உள்ள பழைய கிணறு   ஒன்றில் இருப்பதும் தெரிய வருகிறது. ஆனால், கிரீடம் இருக்கும் இடம் தெரிந்தும் அதை எடுக்காமல், அந்த கிணற்றை பார்த்து ஊர் மக்களும், ராஜ குடும்பமும் பயப்படுகிறது. அது ஏன்?, அந்த கிரீடம் எடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு குறைவான காட்சிகளில் வந்தாலும் தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். யோகி பாபுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இனியா, யோகி வரும் காட்சிகளில் மட்டும் தலைகாட்டுகிறார்.

யோகி பாபு படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இல்லை என்றாலும், பாலசரவணன், சென்ராயன், மகேஷ் ஆகியோர் காமெடி ஏரியாவை கலகலப்பாக நகர்த்தி செல்கிறார்கள்.

மாரிமுத்து, நமோ நாரயணன், கும்கி அஷ்வின், நான் கடவுள் ராஜேந்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ரவிவர்மாவின் ஒளிப்பதிவும், கே.எஸ்.மனோஜின் இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் டெனிஸ் மஞ்சுநாத், நல்ல மெசஜ் ஒன்றையும் சொல்லியிருக்கிறார்.

யோகி பாபு வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், மற்ற நடிகர்கள் மூலம் அவர் இல்லாத குறையை போக்கி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

காமெடியாக தொடங்கும் படம் திடீரென்று திகில் ஜானரில் பயணித்தாலும் அதையும் நகைச்சுவாக சொல்லி, ஆரம்பம் முதல் முடிவு வரை  ஜாலியாக பயணிக்கும் இந்த இந்த 'தூக்குதுரை' ரசிகர்களை முழு திருப்திப்படுத்தியிருக்கிறது.

- சென்னை பத்திரிகா சிவாஜி