‘க்ராணி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
10 வயதுக்குள் இருக்கும் ஒரு சிறுமி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தீலீபனுக்கு ஒரு மூதாட்டி பற்றிய உண்மை தெரிய வருகிறது. அந்த மூதாட்டி குறித்து விசாரிக்கும் போது, பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு திகில் கதையை தெரிந்துக் கொள்கிறார்.
லண்டனில் இருந்து தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தமிழகத்தில் இருக்கும் தன் பூர்வீக வீட்டில் ஆனந்த் நாக் குடியேறுகிறார். வீட்டை சரி செய்யும் வேலைகளில் அவர் பரபரப்பாக இருக்கும் நேரத்தில், வீட்டு வாசலில் ஒரு மூதாட்டி மயக்கம் அடைந்து விழுகிறார். அவரை உள்ளே அழைத்து வந்து, படுக்க வைக்கிறார். அந்த மூதாட்டியை பார்க்கும் ஊர் தலைவர், அவரைப் போலவே இருக்கும் ஒரு மூதாட்டி பற்றிய பயங்கரமான கதை ஒன்றை சொல்லி ஆனந்த் நாக்கை எச்சரிக்கிறார்.
ஊர் தலைவரின் கதையை ஆனந்த் நாக் நம்ப மறுக்கும் நிலையில், அவரது வீட்டில் இருக்கும் மூதாட்டியால் அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து பிள்ளைகள் காப்பாற்றப்பட்டார்களா ?, அந்த மூதாட்டி யார்? ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.
ஒச்சாயி மூதாட்டியாக, அதீத ஒப்பனையோடு நடித்திருக்கும் வடிவுக்கரசி, தள்ளாடும் வயதோடு, ஆரம்பத்தில் இறக்கப்பட வைத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அவர் முகத்தில் தெரியும் வெறித்தனம், பார்வையாளர்களை பீதியடைய செய்கிறது. எந்த பக்கம் போனாலும், மின்னல் போல் சட்டென்று வந்து நிற்பதும், எதிரே இருப்பவரை விட பல அடி உயரத்திற்கு விஸ்வரூபம் எடுப்பதும், என்று இரண்டாம் பாதி முழுவதும் அதிரடி ஆட்டம் ஆடியிருக்கும் வடிவுக்கரசி, வசனம் ஏதும் பேசாமல் தனது நடிப்பு மற்றும் பார்வை மூலமாகவே மிரட்டியிருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் திலீபன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சிங்கம்புலி, ஊர் தலைவராக நடித்திருக்கும் கஜராஜ், வீட்டின் உரிமையாளராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்ணா மற்றும் குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் கன்ஷியாம், பேபி சாண்ட்ரியா என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஏ.மணிகண்டனின் கேமரா, பழைய வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்களை பரபரப்பின் உச்சமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
இசையமைப்பாளர் டாக்டர்.செல்லையா பாண்டியனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கும், காட்சிகளுக்கும் உயிரூட்டியிருக்கிறது.
எம்.எஸ்.கோபியின் படத்தொகுப்பு குழப்பம் இல்லாமல் கதை சொல்லியிருப்பதோடு, குழந்தைகள் தப்பிப்பார்களா ? என்பதை பரபரப்பாக நகர்த்தி பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.
இயக்குநர் விஜய குமாரன், குழந்தைகளுக்கு சொல்லப்படும் மாய மந்திர கதைகளை மையமாக வைத்து, ஒரு சுவாரஸ்யமான திகில் கதையை சொல்லியிருப்பதோடு, அதன் பின்னணியில் ஒரு மூதாட்டியை வைத்து பார்வையாளர்களை அச்சுறுத்தியிருக்கிறார்.
திகில் கதையாக இருந்தாலும், அதை சுவாரஸ்யம் மிக்க ஒரு கதை சொல்லல் மூலம் மிக நேர்த்தியான திரைக்கதையின் வாயிலாக, பல்வேறு கவனம் ஈர்க்கும் அம்சங்களோடு படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் விஜய குமாரன்.
இந்த ‘க்ராணி’ மூலம் பாட்டி கதை சொன்னாலும், அதே பாட்டியின் மூலம் ரசிகர்களை பயமுறுத்தவும் செய்திருக்கும் இயக்குநர் விஜய குமாரன் மற்றும் குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.




