‘லாக்டவுன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘லாக்டவுன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

ஐடி துறையில் பணியாற்ற விரும்பி அதற்கான முயற்சியில் ஈடுபடும் அனுபமா பரமேஸ்வரன், தனது தோழியுடன் மது விருந்து நடைபெறும் ஒரு இடத்திற்கு செல்கிறார். அந்த புதிய உலகத்தால் ஈர்க்கப்படும் அவர், தனது பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு இரவு அங்கேயே தங்கி விடுகிறார். மறுநாள் வீடு சென்று தனது வழக்கமான பணிகளை பார்க்கிறார். சில வாரங்களுக்குப் பிறகு, அவர் உடலில் ஏற்படும் மாற்றங்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அவருக்கு, மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கும் உண்மை தெரிய வருகிறது. அந்த உண்மையால் அவரது வாழ்க்கையே தடம் புரண்டு போக, அந்த பிரச்சனையில் இருந்து தனது பெற்றோருக்கு தெரியாமல் மீள்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த முயற்சி ஒவ்வொன்றும் அவருக்கு பெரும் போராட்டமாக இருக்க, அவற்றை எப்படி எதிர்கொள்கிறார் ?, அவருக்கு என்ன பிரச்சனை ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

பெண்கள் மட்டும் அல்ல ஆண்களாக இருந்தாலும், தங்களுக்கான பிரச்சனையை குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும், இல்லை என்றால் எத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாவார்கள், என்ற ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்யும் ஒரு படைப்பாக கொடுத்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, அதை ஊரடங்கு உத்தரவு என்ற உண்மை சம்பவத்துடன் சேர்த்து மிக சுவாரஸ்யமான திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.

 

தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காகவே அவரை பாராட்ட வேண்டும். அழுத்தமான அதே சமயம் சர்ச்சையான ஒரு கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருப்பதோடு, தனது நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி, பார்வையாளர்களிடம் பாராட்டு பெற்று விடுகிறார்.

 

கட்டுப்பாடு மிக்க குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், புதிய உலகத்தை பார்த்ததும் பரவசமடைவது, அதில் பயணிக்க வாய்ப்பு கிடைத்ததும், அனைத்தையும் மறந்துவிட்டு உற்சாகமாக நடனம் ஆடுவது, பிறகு பிரச்சனையை எதிர்கொண்டு, அதில் இருந்து மீள்வதற்காக போராடுவது, என்று அனைத்து ஏரியாவிலும் அடித்து விளையாடியிருக்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கு விருது உறுதி, என்பதை அடித்து சொல்லலாம்.

 

நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சார்லி மற்றும் நிரோஷா ஆகியோரது எதார்த்தமான நடிப்பு நடுத்தர குடும்பத்தாரின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

 

பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல், தேர்வு செய்த லொக்கேஷன்கள் மற்றும் பயன்படுத்திய விளக்குகள், வண்ணங்கள் அனைத்தும், ஒரு திரைப்படத்தை தாண்டி, எதார்த்தமான ஒரு பெண்ணின் வாழ்க்கையை பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. குறிப்பாக வீட்டுக்குள் படமாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் இயல்பாக சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, உணர்வுப்பூர்வமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.

 

இசையமைப்பாளர்கள் என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இருவரது இசையில் பாடல்கள் பட்டையை கிளப்பியிருப்பதோடு, கதாபாத்திரத்தின் உணர்வுகளை பிரபலிக்கவும் செய்திருக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை பார்வையாளர்களிடமும் தொற்றிக் கொள்ள செய்கிறது.

 

எதிர்பாராத ஒரு சிக்கல், அதுவும் பெரும் சிக்கல், அதில் இருந்து மீள்வாரா ? இல்லையா ?, என்பதை பரபரப்பாக சொல்லாமல், அதன் மூலம் ஒரு பெண் எப்படி பாதிக்கப்படுகிறார், அதில் இருந்து மீள்வதற்கு எப்படி எல்லாம் போராடுகிறார், என்பதை தனது படத்தொகுப்பு மூலம் பார்வையாளர்களிடம் மிக நேர்த்தியாக கடத்தியிருக்கிறார் வி.ஜெ.சாபு ஜோசப்.

 

இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, கொரோனா ஊரடங்கு உத்தரவு காலக்கட்டத்தை கதையின் முக்கிய அம்சமாக பயன்படுத்தியிருந்தாலும், ஒரு பெண் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையை மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, அதற்கான திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.

 

நாயகிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் யாராக இருப்பார் ? என்ற கேள்வியை எழுப்பி பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, நாயகி தன் பிரச்சனையில் இருந்து மீள்வாரா ? என்ற மற்றொரு கேள்வியின் மூலம், படம் முழுவதையும் எதிர்பார்ப்புடன் நகர்த்தி செல்கிறார்.

 

இப்படியும் நடக்குமா ? என்ற மிகப்பெரிய கேள்வியை படம் எழுப்பினாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம், என்ற உண்மையை திருப்பங்கள் நிறைந்த திறைக்கதையின் மூலம் உணர்த்தியிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, அனைத்து விசயங்களையும் லாஜிக் உடன் கையாண்டு, இறுதியில் தான் சொந்த வந்த கருத்தை மிக வலிமையுடன் பதிவு செய்திருக்கிறார்.

 

இந்த ‘லாக்டவுன்’ மூலம் பெண்களிடம் மிகப்பெரிய விழிப்புணர்வையும், எச்சரிக்கையையும் ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, தயரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ் குமரன் உள்ளிட்ட குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.