’வா வாத்தியார்’ பட விமர்சனம்

’வா வாத்தியார்’ பட விமர்சனம்

’வா வாத்தியார்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

சிறு வயதில் இருந்தே தன் தாத்தா மூலம் எம்.ஜி.ஆர் போல் வளர்க்கப்படும் நாயகன் கார்த்தி, திடீரென்று நம்பியாரால் ஈர்க்கப்பட்டு அவரைப் போல் வாழ தொடங்குகிறார். காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், நேர்மையின்று அனைத்து தவறுகளையும் செய்யும் கார்த்திக்கு, கார்ப்பரேட் மற்றும் அரசியல் இடைத்தரகரான சத்யாரஜின் அறிமுகம் கிடைக்கிறது. அவருக்காக சில தவறுகளை செய்யும் கார்த்தியின் சுயரூபம் தாத்தாவுக்கு தெரிய வருகிறது. எம்.ஜி.ஆர் போல் தனது பேரன் வாழவில்லை என்ற கவலையில் அவர் காலமாகி விடுகிறார்.

தாத்தாவின் இறப்பு கார்த்தியை பாதித்தாலும், அவர் எப்போதும் போல் தனது அநீதிக்கு துணை போகும் செயலை செய்ய தொடங்க, திடீரென்று அவரது உடலில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றத்தினால், எம்.ஜி.ஆர் போல் வாழ விரும்பாத கார்த்தி எம்.ஜிஆர் ஆகவே மாறுகிறார். அது எப்படி நடக்கிறது, அதன் மூலம் அவரது வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகிறது, என்பதே படத்தின் மீதிக்கதை.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக கையாண்டு ரசிக்க வைக்கும் கார்த்தி, இரண்டாம் பாதியில் ஏற்றுக்கொண்டிருக்கும் வேடம் சவாலானது என்றாலும், அதை மிக சிறப்பாக செய்து பார்வையாளர்களிடம் பாராட்டு பெறுகிறார். குறிப்பாக எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு கார்த்தியின் உடல் மொழி மற்றும் நடிப்பு எம்.ஜி.ஆர்-ஐ மீண்டும் பார்த்த உணர்வை கொடுக்கும்.

நாயகியாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டிக்கு திரைக்கதையோடு பயணிக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும், நடிப்பை விடவும், அழகு மற்றும் நடனம் மூலமாக மட்டுமே கவனம் ஈர்க்கிறார்.

எம்.ஜி.ஆர் ரசிகராக நடித்திருக்கும் ராஜ்கிரண், வழக்கம் போல் தனது அழுத்தமான நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார். 

வில்லனாக நடித்திருக்கும் சத்யராஜ், மீண்டும் தனது தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை வெளிப்படுத்தி, புதிய சத்யராஜை பார்க்க வைத்திருக்கிறார்.

ஷில்பா மஞ்சுநாத், நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், கருணாகரன், பி.எல்.தேனப்பன், யார் கண்ணன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பாபி சிம்மா என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக  பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார். ஹீரோவுக்கான மாஸ் காட்சிகள் மட்டும் இன்றி, படத்தில் இடம் பெறும் அனைத்து காட்சிகளையும் தனது கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம் மாஸாக காட்சிப்படுத்தியிருப்பவர், சண்டைக்காட்சிகளை கூட பல வண்ணங்களை பயன்படுத்தி ரசிக்கும்படி காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார். குறிப்பாக இரவு நேர காட்சிகளில் பயன்படுத்தியிருக்கும் விளக்குகள் மற்றும் வண்ணங்கள் கவனம் ஈர்க்கிறது.

சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் முனுமுனுக்க வைப்பதோடு, பின்னணி இசை ஒரு கதாபாத்திரமாக பயணித்து திரைக்கதையின் பலவீனத்தை பல இடங்களில் மறைத்து பலம் சேர்த்திருக்கிறது.

வெற்றி கிருஷ்ணனின் படத்தொகுப்பு குழப்பம் இல்லாமல் படத்தை நகர்த்தி செல்வதோடு, அரசியல் பின்னணி கொண்ட கதையை ஃபேண்டஸி பாணியில் சொல்லும் இயக்குநரின் சிந்தனைக்கு ஏற்ப காட்சிகளை தொகுத்து படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் படத்தை பயணிக்க வைத்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் நலன் குமாரசாமி, கதைக்களம் மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் வடிவமைப்பையும் மிக வித்தியாசமாக கையாண்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார். அதுபோலவே இதிலும், கார்த்தியின் கதாபாத்திரத்தை வித்தியாசமாக கையாண்டு அவரது ரசிகர்களை மட்டும் இன்றி எம்.ஜி.ஆர்-ன் ரசிகர்களையும் கவர்ந்து விடுகிறார்.

முதல் பாதி முழுவதும் கார்த்தியின் அலட்டல் இல்லாத நடிப்பால் படம் கலகலப்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் அரசியல் அம்சத்தோடு பயணிக்கும் திரைக்கதையில் எம்.ஜி.ஆர் அம்சம் என்னவெல்லாம் செய்கிறது, என்பதை கமர்ஷியலாக சொன்னாலும், அழுத்தமான அரசியலையும் அலட்டிக்கொள்ளாமல் பேசியிருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.

நலன் குமாரசாமியின் புதிய மற்றும் வித்தியாசமான சிந்தனைக்கு, தனது நடிப்பு மூலம் உயிரூட்டியிருக்கும் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ நிச்சயம் ரசிகர்களை கொண்டாட வைக்கும். 

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு ஏற்ப திகிட்டாத சர்க்கரை பொங்கல் சுவை போன்று அனைத்து தரப்பு ரசிகரையும் ரசிக்க வைக்க கூடிய விதத்தில் வெளியாகியிருக்கும் ‘வா வாத்தியார்’ பட குழுவுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.