தந்தை மற்றும் மகனுடன் ஒன்றாக பணியாற்றியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்
தந்தை மற்றும் மகனுடன் ஒன்றாக பணியாற்றியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்
அருண் விஜய் உற்சாகம்
''அமேசான் ஒரிஜினல் திரைப்படமான 'ஓ மை டாக்' எனும் படத்தில் முதன்முறையாக தந்தை மற்றும் மகனுடன் இணைந்து பணியாற்றியதை ஆசீர்வாதமாக நினைத்து பெருமைப்படுகிறேன்'' என நடிகர் அருண்விஜய் தெரிவித்திருக்கிறார்.
பிரைம் விடியோவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான 'ஓ மை டாக்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த திரைப்படம் கோடை பருவத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியாகிறது. ஒரு நாய் குட்டிக்கும், குழந்தைக்கும் இடையேயான நல்லதொரு புரிதலை அடிப்படையாகக்கொண்ட ஃபீல் குட் கதையாக தயாராகி இருக்கிறது. இதனை அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் திரைப்படத்துறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றிணைத்திருக்கிறது. மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். தாத்தா, தந்தை மற்றும் மகன் என்ற நிஜமான உறவை இவர்கள் திரையிலும் சித்தரித்திருக்கிறார்கள்.
விரைவில் வெளியாகவிருக்கும் 'ஓ மை டாக்' படத்தில் முதன்முறையாக நடிகர் அருண்விஜய், அவரது தந்தை மற்றும் மகனுடன் திரையில் இணைந்து தோன்றியிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது,'' இது ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம். தமிழ் திரை உலகில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதன்முறை. நான் கடந்த காலத்தில் என் அப்பாவுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இது வித்தியாசமானது. தனது அப்பா மற்றும் தாத்தாவுடன் அறிமுகமாவது அர்னவவ்விற்கு இது மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவமாக இருக்கும். இது எங்களால் மறக்க இயலாத ஒன்று.'' என்றார்.
படப்பிடிப்பு அனுபவம் குறித்து பேசுகையில்,'' மிகவும் அருமையாக இருந்தது. ஏனெனில் என் அப்பாவும் நானும் பிசியாக இருப்பதால் நாங்கள் ஒன்றிணைந்து உபயோகமாக நேரத்தை செலவிடுவது அரிது. மேலும் நான் வீட்டில் இருக்கும் நேரத்தில் அர்னவ் உறங்கிக் கொண்டிருப்பான். எங்கள் மூவரையும் ஒன்றிணைத்ததற்காக இயக்குநர் சரோவ் சண்முகத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது என் தந்தை மற்றும் அர்னவ் ஆகியோருடன் செலவழித்த தருணங்கள் அனைத்தும் அழகானவை. அந்த நினைவுகள் அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். என் அப்பாவிற்கும், அர்னவ்விற்கும் இடையே உள்ள தனித்துவமான பந்தத்தை நானும் கண்டேன். தாத்தாக்கள் தங்கள் பேரக் குழந்தைகளுடன் மிகவும் மென்மையாக நடந்து கொள்கிறார்கள். என் அப்பாவிடம் எனக்கு இல்லாத சுதந்திரம் அர்னவுக்கு இருந்தது. அவர்கள் மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். '' என்றார்.
ஒவ்வொரு குழந்தைகளும் மற்றும் செல்லப்பிராணியை விரும்பும் மக்களும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் 'ஓ மை டாக்'. அர்ஜுன் மற்றும் அவரது செல்ல நாய் குட்டியான சிம்பா, இவர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்ளும் அன்பு மற்றும் பாசம் பார்வையாளர்களின் இதயத்தை வருடும். அர்ஜுன் சிம்பாவை சந்திக்கிறார். அவர் சிம்பாவை காப்பாற்றுகிறார். பின்னர் சிம்பாவை தனது சொந்தம் என வளர்க்கிறார். அர்ஜுனும் சிம்பாவும் தடைகளை கடந்து சென்று, இறுதியில் அவர்களை சுற்றியுள்ள அனைவரும் இதயங்களுக்குள் சென்று தங்களின் வழியை கண்டறிகிறார்கள்.
'ஓ மை டாக்: படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ளனர். இணை தயாரிப்பாளராக ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பணியாற்றியிருக்கிறார். இவர்களுடன் ஆர் பி டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் ரமேஷ் பாபுவும் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்திருக்கிறார்.
இந்த கோடை விடுமுறையில் 'ஓ மை டாக்' படத்தை பார்க்க தவறாதீர்கள். குடும்ப பொழுதுபோக்கு படங்களை பிரத்யேகமாக உலகளவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரைம் விடியோ இந்திய முழுவதும் மற்றும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியிடுகிறது.