’பைசன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’பைசன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’பைசன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’பைசன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

தென் மாவட்டங்களில் 90-களில் நடந்த சமூக மோதல்கள்கள் இளைஞர்களை பாதித்த விதம், அதனால் திசை மாறிய அவர்களது வாழ்க்கை ஆகியவற்றுடன், ஒரு கபடி வீரரின் வலி மற்றும் தடை மிகுந்த வாழ்க்கையை இரத்தமும் சதையுமாக சொல்வதே ‘பைசன்’.

 

தடைகளை உடைத்து முன்னேறும் ஒரு விளையாட்டு வீரரின் வலி மிகுந்த வெற்றி பயணத்தை, தனது மண் மற்றும் மக்களின் வாழ்வியல் பின்னணியில் சொல்லியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜும், அவரது கற்பனை மற்றும் கனவுகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் நாயகன் துருவ் விக்ரமும் படம் முழுவதும் பார்வையாளர்களை வியக்க வைக்கிறார்கள்.

 

பைசன் என்ற தலைப்புக்கு ஏற்ப உடல் ரீதியாக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கும் நாயகன் துருவ் விக்ரம், கபடி வீரராக களத்தில் நிற்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. பள்ளிப் பருவத்திலும், கபடி வீரராக களம் காணும் போதும் தோற்றத்தில் வேறுபாட்டை வெளிப்படுத்த கடுமையாக உழைத்திருக்கும் துருவ் விக்ரம், படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். 

 

துருவ் விக்ரமின் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி, கண்களின் மூலமாகவே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தி, தந்தையின் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தி விடுகிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் ரஜிஷா விஜயன், ஆசிரியராக நடித்திருக்கும் அருவி மதன், இயக்குநர் அமீர், லால் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

 

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுவதோடு, திரையரங்கில் கைதட்டவும், விசில் அடிக்கவும் வைக்கிறது. மண் மற்றும் மக்களின் கலாச்சாரம் பிரதிபலிக்கும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது. 

 

ஒளிப்பதிவாளர் எழில் அரசு.கே, படம் பார்ப்பவர்களுக்கு தென் மாவட்ட நிலப்பரப்பில் பயணித்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் மாரி செல்வராஜ், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நிலப்பரப்பின் சமூக மோதல்கள் மற்றும் அந்த மண்ணின் கோபத்தையும், வலியையும் பல்வேறு குறியீடுகளின் வழியில் பார்வையாளர்களிடம் கடத்துவதோடு, தனது தனித்துவமான கதை சொல்லல் மூலம் படம் முழுவதும் வியக்க வைக்கிறார்.

 

சாதி உள்ளிட்ட பிற காரணங்களினால் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் பற்றி படம் பேசினாலும், அனைத்து சமூகத்தினரும் கொண்டாடும் விதமாக திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ், இங்கு அனைவரும் சமம் என்பதற்காக ஒரு போராட்டமும், எதுக்கு என்று தெரியவில்லை என்றாலும், இருக்கும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு போராட்டமும், எப்போதோ தோன்றி இப்போதும் அது பலருக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

‘பைசன்’ இயக்குநர் மாரி செல்வராஜ், நாயகன் துருவ் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.