‘டியூட்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘டியூட்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
நாயகன் பிரதீப் ரங்கநாதனைக் காதலிப்பதாக அவருடைய மாமா மகள் நாயகி மமிதா பைஜு சொல்கிறார்.அதை நிராகரிக்கிறார் நாயகன்.சில கால இடைவெளியில் பிரதீப்புக்கும் மமிதா மீது காதல் வருகிறது. ஆனால், மமிதா இன்னொருவரைக் காதலிக்கிறார்.
அந்தக் காதல் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கும்போது பிரதீப்க்கு மமிதாவுடன் கல்யாணம் நடக்கிறது.மனதில் ஒருவர் மணவறையில் ஒருவர்.அந்தப் பெண் தவிக்கிறார்.அதை உணர்ந்த நாயகன் என்ன செய்கிறார்? என்பதுதான் படம்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாக வலம் வந்திருக்கிறார் பிரதீப்.ஆட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதே என்று நினைக்கும்போதே அதைவிடப் பெரும்சுமையைச் சுமக்கிறார்.இரண்டுவிதமான நடிப்புகளிலும் தேர்ச்சி பெற்று தான் ஒரு வெற்றிகரமான நடிகர் என நிறுவியிருக்கிறார்.
மிக கனம் பொருந்திய இந்த வேடத்துக்கு மிகப் பொருத்தமான தேர்வாக நாயகி மமிதா பைஜு இருக்கிறார்.அழகு, இளமை, துள்ளல் வேடத்துக்கேற்ற நடிப்பு என எல்லாவற்றிலும் கவர்கிறார்.
நாயகியின் பழமைவாத அப்பா வேடமேற்றிருக்கிறார் சரத்குமார்.அவருடைய நேர்மறை பிம்பத்துக்கு எதிர்மறை வேடம் என்றாலும் நடிப்பில் நிறைவு காட்டியிருக்கிறார்.
ரோகிணி, திராவிட் செல்வம், ஹிருது ஆகியோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையில் கூடுதல் கவனம் வேண்டும்.
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் காட்சிகளிலும் இளமைத்துள்ளல்.
எழுதி இயக்கியிருக்கும் கீர்த்திஸ்வரன்,முதல் படத்திலேயே ஆழமான விசயத்தைத் தொட்டிருக்கிறார். இளம்பெண்களின் மனதை பிரதிபலிக்கும் கதையை திரைமொழியில் சுவாரஸ்யமாகவும், கலகப்பாகவும் சொல்லி பார்வையாளர்களை கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்து செல்கிறார்.
தீபாவளி பண்டிகைக்கு ஏற்ற கொண்டாட்டமான படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், நாயகன் பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.