பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்

பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்

"பேட்ட" திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மிகுந்த நன்றியுடன் இதை நான் எழுதுகிறேன். 2012-ல் எனது முதல் படமான பீட்சா வெளிவந்த நாள் முதல், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களிடமிருந்து ஈடில்லா அன்பும் ஆதரவும் பெற்று வருகிறேன். அவர்களின் வார்த்தைகளும் வாழ்த்துக்களும் தான் இவ்வுலகிற்கு என்னையும் என் கலையையும் எடுத்து சென்றது.  

என்னுடைய கடந்த நான்கு படங்களான - பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி மற்றும் மெர்க்குரி - அனைத்திற்குமே பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் அளவில்லா ஆசியும் ஆதரவும் இருந்ததால் தான் நான் என்னுடைய தலைவர் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. “பேட்ட” திரைப்படம் அறிவித்த நாள் முதல் இன்று வரை எனக்கும், எங்களின் திரைப்படமான “பேட்ட”-க்கும் கிடைத்து வரும் அன்பும் ஆதரவும் என்னை நெகிழச் செய்கிறது. இவ்வாறு கிடைக்கும் அன்பும் ஆதரவும் ஒரு இயக்குனராக எனக்கிருக்கும் பொறுப்பினை உணர்ச் செய்கிறது. அதை நான் “பேட்ட” மூலமாக சரிவர செய்திருக்கிறேன் என உறுதியாக நம்புகிறேன். 

சன் பிக்சர்ஸ் திரு.கலாநிதி மாறன் தயாரிப்பில் தலைவர் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள  “பேட்ட” திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. “பேட்ட” எனது நீண்ட நாள் கனவு மட்டுமல்ல, நானும் எனது குழுவும் பயணித்த ஒரு மறக்க முடியாத பயணத்தின் அனுபவமும் கூட. “பேட்ட” திரைப்படத்தை உங்களிடம் காட்டுவதற்கு நான் பேராவலுடன் இருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்று கூடி தலைவரை கொண்டாடும் நேரம் இது.. நீங்கள் ஒவ்வொருவரும் “Get Rajinified” ஆகும் தருணம் இது. 

“பேட்ட” திரைப்படம் தலைவர் ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் என உறுதியாக நம்புகிறேன். இது வரை எனக்கும் என் படங்களுக்கும் நீங்கள் அளித்த ஆதரவு, இம்முறையும் தொடர வேண்டுகிறேன். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இத்திரைப்படம் உங்களுக்கு தரவிருக்கும் ஆச்சிரியங்களையும் திருப்பங்களையும் நீங்கள் எழுதும் விமர்சனம் மற்றும் கட்டுரைகள் மூலமாக வெளியிட வேண்டாம் என்று தாழ்வுடன் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து ரசிகர்களும் திரையரங்கில் தலைவரையும் இத்திரைப்படத்தையும் சிறப்பான முறையில் கொண்டாட உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

என்றும் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். நன்றி. 

அன்புடனும் நன்றியுடனும் 
 கார்த்திக் சுப்புராஜ்