’திரெளபதி 2’ பட விமர்சனம்

’திரெளபதி 2’ பட விமர்சனம்

’திரெளபதி 2’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

14ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வல்லாள மகாராஜா மற்றும் அவர் கீழ் ஒரு சிறு பகுதியை ஆட்சிபுரிந்த காடவராயர்கள் பற்றியும், அவர்கள் துருக்கியரின் படையெடுப்பை எதிர்த்து போரிட்டதை பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, அதிகம் அறியப்படாத வரலாற்றை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார். 

திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த மூன்றாம் வல்லாள மகாராஜாவின் கீழ் இருந்த பல பாலைகளில் விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலத்தை சேர்ந்த பாலை ஒன்று. அதனை ஆட்சி செய்யும் குறுநில மன்னர் வாரிசான வீரசிம்ம காடவராயர், வல்லாள மகாராஜாவின் கருட படையில் இணைந்து பணியாற்றுகிறார். வட இந்தியாவை கைப்பற்றிய துருக்கியர்கள் தென்னிந்தியாவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். அவர்களை எதிர்த்து போரிடும் வல்லாள மகாராஜா கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மகாராஜாவையும், கருட படை வீரர்களையும் காப்பாற்ற முடியாமல் போனதை எண்ணி வருந்தும் வீரசிம்ம காடவராயர், தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் போது, மகாராஜா அவர் முன் தோன்றி சில பொறுப்புகளை அளிக்கிறார்.

மகாராஜாவின் உத்தரவை நிறைவேற்றும் முயற்சியில் வீரசிம்ம காடவராயர் ஈடுபட, அவரது மனைவி திரெளபதி தேவி சதிவலையில் சிக்கி, தன் கணவரை தவறாக நினைத்து அவரை பிரிகிறார். நேரம் வரும்போது தன் நிலையை மனைவிக்கு புரிய வைக்க முடிவு செய்யும் வீரசிம்ம காடவராயர், மகாராஜா வழங்கிய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான பயணத்தை மேற்கொள்கிறார். அது என்ன ?, அதில் அவர் வெற்றி பெற்றாரா ?, சதிவலையில் சிக்கிய திரெளபதி தேவியின் நிலை என்ன ? , என்பது தான் ‘திரெளபதி 2’ படத்தின் மீதிக்கதை.

வீரசிம்ம காடவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி, தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருப்பதோடு, கடுமையாக உழைத்திருப்பதும் திரையில் தெரிகிறது. ஒரு கதாபாத்திரத்திற்காக அதிகம் மெனக்கெடலோடு பயணப்பட்டிருக்கும் ரிச்சர்ட் ரிஷியின் தோற்றம் மற்றும் உடல் மொழி, அவரை வீரசிம்ம காடவராயராக பார்வையாளர்கள் மனதில் எளிதில் இடம் பிடிக்க செய்கிறது.

நாயகியாக திரெளபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்‌ஷனா இந்துசூடன், கம்பீரமான தோற்றம், சிரித்த முகம் என்று படம் முழுவதும் ஒரு சிலை போல் வலம் வருகிறார். வீரமிக்க பெண் கதாபாத்திரத்தை தன் உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் ரக்‌ஷனா இந்துசூடன் திரெளபதி என்ற உருவத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.

வல்லாள மகராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி தன் வேலையை சரியாக செய்திருக்கிறார். முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிராக் ஜானி, முகலாயர்களின் கொடூரத்தை தன் நடிப்பின் மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜியாசுதீன் தம்கானியாக நடித்திருக்கும் தினேஷ் லம்பாவும், எந்த நேரமும் பெண் சுகம் தேடுபவராக நடித்து, துருக்கியரின் பெண் மற்றும் பொன் மீதான மோகத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.

முகமது பின் துக்ளக்கின் மனைவியாக நடித்திருக்கும் தேவயானி சர்மா, சம்புவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேல ராமூர்த்தி, பரணி, திவி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, அருனோதயன் லக்‌ஷ்மணன் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் வரலாற்று கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொறுந்தி திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தர், வரலாற்று காட்சிகளை ஓவியம் போல் படமாக்கியிருக்கிறார். குறிப்பாக திரெளபதி தேவியின் கதாபாத்திரம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட ஆடைகளின் வண்ணம், அவரது காட்சிகளில் பயன்படுத்திய விளக்குகள் அனைத்தும் பழமையான ஓவியத்தை பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது. 

ஜிப்ரான் இசையில் பாடல்கள் கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும், திரும்ப திரும்ப கேட்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. பின்னணி இசை கதாபாத்திரங்களின் வீரமிக்க உணர்வுகளையும், விறுவிறுப்பான காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. 

எஸ்.தேவராஜின் படத்தொகுப்பு, கமலநாதன்.எஸ்-ன் கலை இயக்கம், மோகன்.ஜி-ன் ஆடை வடிவமைப்பு என தொழில்நுட்ப கலைஞர்களின் பணி படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன்.ஜி ஆகியோரது கதை மற்றும் வசனங்கள் அதிகம் அறியாத வரலாற்று பதிவை திரை மொழியில் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறது. வசனங்கள் எளிமையாக இருந்தாலும், அதன் மூலம் மக்களுக்கு சொல்ல முயற்சித்திருப்பதை மிக தெளிவாகவே சொல்லியிருக்கிறார் பத்மா சந்திரசேகர்.

வரலாற்று சம்பவங்களுடன் சில கற்பனைகளை சேர்த்து, தமிழகத்தில் முகலயார்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்டதையும், அதன் பின்னனியில் இருக்கும் வல்லாள மகாராஜா பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, தனது புத்திசாலித்தனமான இயக்கத்தினால்  ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் எல்லைக்குள் மிகப்பெரிய வரலாற்று படைப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

முகலாயர்கள் இந்துக்கள் மீது நடத்திய கொடூரங்களை விவரிக்க முயன்றிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, அதை ஒரு சில காட்சிகளின் மூலம் தெளிவாக சொல்லியிருப்பதோடு, யுத்தம் மற்றும் முற்றுகை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு, தமிழர்களின் நிலங்கள் இஸ்லாமியர்கள் வசம் சென்றது எப்படி ? என்பதன் பின்னணி உள்ளிட்ட பல தகவல்களை மிக தைரியமாகவும், வெளிப்படைத்தன்மையுடன் பேசியிருக்கிறார். 

பிரமிக்க வைக்கும் பிரமாண்டமான காட்சிகள் சற்று குறைவாக இருப்பது சிறு குறையாக இருந்தாலும், தனக்கான ஒரு பட்ஜெட் எல்லைக்குள் மிகப்பெரிய வரலாற்று பதிவை மிக நேர்த்தியாகவும், தெளிவாகவும் காட்சி மொழியில் சொல்லியிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி-யின் ‘திரெளபதி 2’ படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.