‘குடிமகன்’ திரைப்படம் மூன்று வெற்றியை அடைந்திருக்கிறது: இயக்குனர் பாக்யராஜ்
ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குடிமகன்’. “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை இயக்குனர் இயக்கி இருந்தார்.
இதில் ஜெய்குமார் நாயகனாகவும், ‘ஈரநிலம்’ ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் பாக்யராஜ், படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது, ‘குடிமகன்’ திரைப்படம் மூன்று வெற்றி அடைந்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி. படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. பெண்கள், தாய்குலங்களை கவர்ந்திருப்பது மூன்றாவது வெற்றி. குடி பழக்கத்திற்கு ஆளானவருக்கு என்ன பிரச்சனை வரும் என்று குடும்பத்தை வைத்து சொல்லியிருக்கிறார். இயக்குனர் சத்தீஷ்வரன் ஸ்கிரிப்ட் மேல் வைத்திருந்த நம்பிக்கையை வைத்துதான் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நம்பிக்கைக்கு ஏற்றார்போல் படம் வெளியாகி, எதிர்பார்த்ததை விட நிறைய தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார்.