’மத கஜ ராஜா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’மத கஜ ராஜா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’மத கஜ ராஜா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’மத கஜ ராஜா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி 

 

திருமணம் ஒன்றில் தனது பள்ளி நண்பர்களை சந்திக்கும் விஷாலுக்கு, அவர்கள் அனைவரும் பிரச்சனையில் சிக்கி விரக்தியில் இருப்பதும், பணம், அரசியல், ஊடகம் ஆகிய மூன்றையும் தன்வசம் வைத்துக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய தொழிலதிபர் தான், அதற்கு காரணம் என்பதும் தெரிய வருகிறது. அவரிடம் சமாதானமாக பேசி நண்பர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சியில் விஷால் ஈடுபடுகிறார். ஆனால், விஷாலை எறும்பாக நினைத்து தொழிலதிபர் உதாசினப்படுத்த, அந்த யானையை விஷால் எப்படி சாய்த்து, தனது நண்பர்களை பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கிறார், என்பதை காமெடி, காமநெடி, மசாலாநெடி ஆகிய மூன்றையும் சேர்த்து சொல்வது தான் ‘மத கஜ ராஜா’. 

 

12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்பதால் விஷால் இளமையாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் அரசியல் மற்றும் பஞ்ச் வசனங்கள் பேசாமல் இருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் ஆறுதல் அளித்திருக்கிறது. வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் காமெடி, காதல், என அனைத்திலும் அமர்க்களப்படுத்தியிருக்கும் விஷால், தன்னை முன்னிலைப்படுத்தாமல் படம் முழுவதும் ஒரு நடிகையோ அல்லது ஒரு நடிகரோ உடன் இருப்பது போல் தன் திரை இருப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  

 

நாயகிகளாக நடித்திருக்கும் அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவருக்கும் இடுப்பு ஆட்டுவதிலும், தொப்புள் காட்டுவதிலும் நிச்சயம் போட்டி நிலவியிருக்கும். அதான், பாடல் காட்சிகளில் அம்மணிகள் போட்டி போட்டு காட்டியிருக்கிறார்கள். 

 

வில்லனாக நடித்திருக்கும் சூனு சூட், வழக்கமான பணக்கார வில்லன் வேடத்தில் கச்சிதமாக பொருந்தி, கச்சிதமாக நடித்திருக்கிறார். 

 

விஷாலின் நண்பராக நடித்திருக்கும் சந்தானம், வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. அதிலும், மனோபாலா, லொள்ளு சபா மனோகர், சுவாமிநாதன் ஆகியோருடன் சந்தானம் கூட்டணி அமைக்கும் போது காமெடி காட்சிகள் சரவெடியாக வெடித்து மக்களை மத்தாப் பூவாக சிரிக்க வைக்கிறது. 

 

கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் ஆர்யா, விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் சடகோபன் ரமேஷ், நித்தின் சத்யா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். 

 

விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியலாகவும், மக்களை குஷிப்படுத்தும் விதத்திலும் அமைந்திருக்கிறது. 

 

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளில் கேமராவை சுழலவிட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். 

 

படத்தை முதலில் இருந்து பார்த்தாலும் சரி, இடைவேளை நெருங்கும் இடத்தில் இருந்து பார்த்தாலும் சரி அல்லது இறுதிக் காட்சி நெருங்கும் இடத்தில் இருந்து பார்த்தாலும் சரி, பார்வையாளர்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி கதை புரியும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி. 

 

காமெடி படம் என்றால் லாஜிக் பார்க்க கூடாது, சிரிப்பு என்ற மேஜிக்கை மட்டுமே பார்க்க வேண்டும், என்று சொல்வார்கள். அதற்காக, தன் மகள் பக்கத்தில் இருக்கும் போதே, மகள் வயதுடைய ஒரு பெண்ணை இளைஞர்களுடன் சேர்ந்து முதியவர் காமத்துடன் பார்ப்பதை எல்லாம் எப்படி காமெடி என்று எடுத்துக்கொள்வது? 

 

தனது வழக்கமான பாணியில் முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஒரு எளிமையான கருவுக்கு, எளிமையான மற்றும் பழைய பாணியில் திரைக்கதை அமைத்தாலும் அதை அனைத்து தரப்பினரும் சிரிக்க கூடிய விதத்தில் இயக்கியிருக்கும் இயக்குநர் சுந்தர்.சி அவர்களுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.