’தருணம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’தருணம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’தருணம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’தருணம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியான நாயகன் கிஷன் தன் வேலை விசயமாக சென்னை வருகிறார். சென்னையில் பணியாற்றிக் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிக்கும் நாயகி ஷ்ம்ருதி வெங்கட்டை சந்திக்கிறார். இருவரும் நட்பாக பழகுகிறார்கள். அதே சமயம், ஷ்ம்ருதி வெங்கட் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ராஜ் ஐயப்பா, அவரை அடைய நினைக்கிறார். இதற்கிடையே, கிஷன் தாஸ் மற்றும் ஷ்ம்ருதி வெங்கட் காதலிக்க, அவர்களது பெற்றோர்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். 

 

அதன்படி கிஷன் தாஸ் - ஷ்ம்ருதி வெங்கட் நிச்சயதார்த்தம் விரைவில் நடக்க இருக்கும் நிலையில், ராஜ் ஐயப்பா தனியாக இருக்கும் ஷ்ம்ருதி வெங்கட்டின் வீட்டுக்குள் நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். அவரிடம் இருந்து ஷ்ம்ருதி வெங்கட் தப்பிக்க முயற்சிக்கும் போது, கீழே விழும் ராஜ் ஐயப்பா இறந்து விடுகிறார். அந்த சமயத்தில் அங்கு வரும் கிஷன் தாஸ், இதை விபத்து என்றால் யாரும் நம்ப மாட்டார்கள், கொலை என்று சொல்லி நம்மை கைது, வழக்கு என்று விசாரிப்பார்கள், எனவே இதில் இருந்து யாருக்கும் தெரியாமல் தப்பிப்பது தான் நல்லது, என்று கூறி ராஜ் ஐயப்பாவின் உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த முடிவு செய்கிறார். அதே சமயம், வேறு எங்கும் உடலை எடுத்துச் செல்ல முடியாது என்பதால், அடுக்குமாடி குடியிருப்பில் அந்த உடலை வைத்துக்கொண்டு, அதை தற்கொலையாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் கிஷன் தாஸ், அதை எப்படி செய்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

 

தெளிவான திட்டங்கள் மூலம் கொலையை தற்கொலையாக மாற்ற முயற்சிக்கும் கிஷன் தாஸ் மற்றும் குற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது? என்ற பதற்றத்தையும், பயத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி நடித்திருக்கும் ஷ்ம்ருதி வெங்கட் இருவரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

 

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராஜ் ஐயப்பா, அவரது அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பாலசரவணன் ஆகியோர் குறைவான காட்சிகள் வந்தாலும், படம் முழுவதும் நிறைந்திருப்பது போல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பாடல்கள் தேவைப்படாத கதைக்களம் என்றாலும் தர்புகா சிவா இசையமைத்த பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. அஸ்வின் ஹேமந்தின் பின்னணி இசை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கான உருட்டல், மிரட்டல் சத்தம் இல்லாமல் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர்களுக்கு பயன்படுத்தப்படும் வழக்கமான வண்ணத்தை தவிர்த்துவிட்டு, காட்சிகளை இயல்பாக படமாக்கியிருக்கிறார். 

 

உடலை அப்புறப்படுத்துவது மிகவும் சவலான விசயம் என்றாலும், அதை நாயகன் சாமத்தியமாக செய்வதை பார்வையாளர்களுக்கு புரியும்படியும், அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியும் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் அருள் இ.சித்தார்த்தின் பணி சிறப்பு.

 

கொலையை மறைப்பதற்காக குற்றவாளிகள் வழக்கமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் கையாண்டிருக்கும் புதிய யுக்தி படத்தை மற்ற கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் இருந்து முற்றிலும் வேறுபடுத்தி காட்டுவதோடு, அந்த யுக்தியை எப்படி செயல்படுத்த முடியும்? என்ற கேள்வியை பார்வையாளர்களிடம் எழுப்பி, அதற்கான விடையை அறிந்துக்கொள்ளும் ஆவலையும் தூண்டும் விதத்தில் காட்சிகள் அனைத்தும் திக்...திக்...அனுபவத்தை கொடுக்கிறது.

 

எதிர்பாரத தருணத்தில் நடந்த ஒரு கொலை, அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் நாயகனின் புத்திசாலித்தனம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு மிக சுவாரஸ்யமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன், முதல் பாதி திரைக்கதையை சில குறைகளோடு நகர்த்தினாலும், இரண்டாம் பாதியில் யூகிக்க முடியாத திருப்பங்கள் மூலம் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்பவர், தனது புத்திசாலித்தனம் மற்றும் லாஜிக் மீறாத காட்சிகள் மூலம் ரசிகர்களையும் கதைக்களத்துடன் பதற்றத்துடன் பயணிக்க வைத்துவிடுகிறார்.

 

படத்தின் ஆரம்பம் வழக்கமான பாதையில் பயணித்தாலும், இடைவேளைக்கு முன்பு வரும் திருப்பம் மற்றும் இக்கட்டான தருணங்களை கடப்பதற்காக நாயகன் போடும் திட்டமும் அதை செயல்படுத்தும் விதமும் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் கலந்த திரில்லர் அனுபவத்தை கொடுத்து சீட் நுணியில் உட்கார வைத்திருக்கும் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.