’மிஸ்சஸ் & மிஸ்டர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’மிஸ்சஸ் & மிஸ்டர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’மிஸ்சஸ் & மிஸ்டர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’மிஸ்சஸ் & மிஸ்டர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

 

 

காதல் திருமணம் செய்து கொள்ளும் வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். 40 வயதை எட்டும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால், ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும், கர்ப்பமாவதற்கான அனைத்து முயற்சிகளிலும் வனிதா ஈடுபட்டு வருகிறார். அதன்படி வனிதா கர்ப்பமாகி விட, ராபர்ட்டுகு தெரிந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள தடையாக இருப்பார், என்று நினைத்து அவருக்கு தெரியாமல் பாங்காக்கில் இருந்து இந்தியா வந்துவிடுகிறார். வனிதாவின் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் ராபர்ட், வனிதாவை தேடி இந்தியா வருகிறார். வனிதா ஆசைப்பட்டது போல் குழந்தை பெற்றுக் கொண்டாரா?, அவரது கணவர் ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் என்ன ? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

நாயகியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், 40 வயது பெண்மணி கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். ராபர்ட்டை உருகி உருகி காதலிப்பவர், குழந்தை பெற்றுக் கொள்வதற்காக செய்யும் வேலைகள் அனைத்தும் ஓவர் கசமுசாவாக இருக்கிறது.

 

வனிதாவின் கணவராக நடித்திருக்கும் நடன இயக்குநர் ராபர்ட், வனிதா மட்டும் போதும், குழந்தை வேண்டாம் என்பதற்கான காரணத்தை மறைத்து, அவரை காப்பாற்ற போராடும் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். 

 

வனிதாவின் அம்மாவாக நடித்திருக்கும் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஃபாத்திமா பாபு, ஸ்ரீமன், ஆர்த்தி கணேஷ், கணேஷ்குமார், ரவிகாந்த், அனுமோகன், வாசுகி, ஸ்வேதா பாரதி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் மற்றும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கும் கிரண் என அனைவரும் அதர பழைய நடிகர்களாக இருப்பதால், அவர்களது திரை இருப்பு மற்றும் நடிப்பு படத்திற்கு எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை.

 

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர்கள் ராஜபாண்டி.டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், டிஜி கபில் ஆகியோரது பணியில் குறையில்லை.

 

நாயகியாக நடித்திருப்பதோடு எழுதி இயக்கியிருக்கும் வனிதா விஜயகுமார், தற்போதைக் காலக்கட்ட இளைஞர்களுக்கு பிடிக்கும் ஒரு படமாக கொடுக்க முயற்சித்திருந்தாலும், அதை பழைய பாணியில் கொடுத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சி, வசனக் காட்சிகளில் இரட்டை அர்த்தம், பழைய நடிகர்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு நகைச்சுவை என முழுக்க முழுக்க கமர்ஷியலான ஒரு படத்தை கொடுத்திருந்தாலும், அதை முழுமையாக ரசிக்கும்படியான ஒரு படமாக கொடுக்க தவறியிருக்கிறார்.

 

படக்குழுவுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.