’ஓஹோ எந்தன் பேபி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ஓஹோ எந்தன் பேபி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’ஓஹோ எந்தன் பேபி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ஓஹோ எந்தன் பேபி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

 

 

உதவி இயக்குநரான நாயகன் ருத்ரா, நடிகராகவே நடித்திருக்கும் விஷ்ணு விஷாலிடம் கதை சொல்ல செல்கிறார். அவர் சொல்லும் இரண்டு கதைகளில் ஈர்க்கப்படாத விஷ்ணு விஷால், காதல் கதையை எதிர்பார்க்கிறார். இதனால், தனது சொந்த காதல் கதையை அவரிடம் ருத்ரா விவரிக்கிறார். அந்த கதை விஷ்ணு விஷாலுக்கு பிடித்துப் போக, இரண்டாம் பாதியை சொல்லும்படி கேட்கிறார். காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் காதலியை பிரிந்த ருத்ரா, தன் காதல் கதைக்கு முடிவு இல்லாமல் தடுமாறுகிறார். பிரிந்த காதலர்கள் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தெரிந்தால் மட்டுமே படம் பண்ணுவேன், என்று சொல்லும் விஷ்ணு விஷால், அதற்காக காதலியை மீண்டும் சந்திக்கும்படி ருத்ராவிடம் சொல்கிறார்.

 

பிரிந்துச் சென்ற காதலியை பல வருடங்களாக சந்திக்காத ருத்ரா, தன் பட வாய்ப்புக்காக மீண்டும் சந்தித்தாரா?, உடைந்த அவரது காதல் மீண்டும் ஒன்று சேர்ந்ததா?, அவரது காதல் பிரிவின் காரணம் என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடையை இளமை துள்ளளோடும், தற்போதைய தலைமுறையின் காதல், நட்பு, உறவுகள் பற்றிய அலசலோடும் சொல்வது தான் ‘ஓஹோ எந்தன் பேபி’.

 

நாயகனாக அறிமுகமாகியிருக்கும் நடிகர் விஷ்ணு விஷாலில் சகோதரர் ருத்ரா, முதல் படம் போல் அல்லாமல் நடிப்பில் அசத்துகிறார். பள்ளி, கல்லூரி, இளமைப் பருவம் என மூன்று காலக்கட்டங்களுக்கும் ஏற்ப தன் உருவத்தை மாற்றிக் கொண்டு நடித்திருப்பவர், மூன்று காலக்கட்டங்களிலும் வயதுக்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார். காதல், சோகம், கோபம், ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் ருத்ரா, எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக கையாளக்கூடிய திறமைப்படைத்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

நடிகராகவே நடித்திருக்கும் விஷ்ணு விஷால், விஜய், அஜித் ஆகியோர் போல் பேசி நடித்திருக்கும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அதிலும், மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் காட்சிகளில் அவர் நடிப்பது, ஒரு நடிகராக வலம் வருவது என வயிறு வலிக்க சிரிக்க வைத்தாலும், மனைவி உடனான மோதல், பிரிவு பற்றி பேசி கவலைப்படும் காட்சியில் அசால்டாக நடித்து பார்வையாளர்களை கலங்கடித்து விடுகிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் மிதிலா பால்கர், ருத்ராவுக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார். கோபமடையும் ஆண்களைப் பார்த்து மிரண்டு போகும் காட்சியிலும், தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து புலம்பும் காட்சியிலும் அவரது நடிப்பு கைதட்டல் பெறுகிறது.

 

இயக்குநராகவே நடித்திருக்கும் மிஷ்கின், கருணாகரன் ஆகியோரது காட்சிகள் சிரிக்கவும் வைக்கிறது, திரைக்கதையில் முக்கிய பங்காற்றி சிந்திக்கவும் வைக்கிறது.

 

நிர்மல் பிள்ளை, அஞ்சலியாக நடித்திருக்கும் நடிகை, கஸ்தூரி, ரமேஷ் பிரபா ஆகியோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

ஜென் மார்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், கதைக்களம் போல் காட்சிகளையும் இளமை துள்ளலோடு படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பாளர் பிரணவின் பணியும் நேர்த்தி.

 

காதல் கதை என்றாலும், அதை ஒரு திரைப்படத்தின் பின்னணியில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், தற்போதைய தலைமுறையினர் காதல் உணர்வுகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், என்பதை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்.

 

முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருந்தாலும், குடும்ப சூழல், கணவன் - மனைவி புரிதல் உள்ளிட்ட உறவுகளின் மேன்மை பற்றி வசனங்கள் மூலமாக சொல்லாமல், காட்சிகள் மூலமாக சொல்லி ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், இளைஞர்கள் கொண்டாடும் ஒரு படமாக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

 

படக்குழுவுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.